சொல்லியல் (Solliyal)


வணக்கம்,

உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளில் இருந்தும் அலசி ஆராயும் போது மொழிகள் எனப்படுவன பல நுட்பங்களை உள்ளடக்கிய வரம்பற்றதொரு சமுத்திரமாக திகழ்கிறது. அன்றாட தகவல் பரிமாற்றத்தைத் தாண்டி மொழி எனப்படுவது ஓர் இனத்தின் மாண்பைப் பறைசாற்றுவதோடு அதன் அடையாளமாகவும் திகழ்கிறது. அந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் சொற்களஞ்சியங்களே ஒரு வாழும் மொழியின் உயிர்நாடியாகவும் அது எழுந்து ஆள்வதற்குமான அஸ்திவாரமாகவும் இருக்கிறது.சொற்கள் என்பனவற்றை இலக்கிய இலக்கணக் கோணத்திலிருந்து மட்டும் ஆராயாமல் அவற்றைச் சூட்சும ரீதியாக பார்க்கும்போது தான் அதனுடைய மகோன்னதங்கள் நமக்குப் புரிய வருகின்றன. அவ்வகையில் தலைசிறந்த சொற்களைச் சரியான இடங்களில் பயன்படுத்தும்போது நம்மால் பல புரட்சிகளுக்கு வித்திடவும் தனி மனிதனின் வாழ்வியலில் பல திருப்பங்களை உருவாக்கவும் முடியும். சில நூல்களை வாசிக்கும்போது அவைத் தானாகவே நமக்குள் ஊடுருவி சில விளங்கிக் கொள்ள இயலாத அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட மெச்சத்தகு எழுத்தாளர்கள் வேறு கிரகங்களிலிருந்தோ அல்லது தங்களால் உருவாக்கப்பட்ட சொற்களையோ பயன்படுத்துவது கிடையாது. மாறாக, நம்முடைய சிந்தையிலே சிறகடிக்கும் வார்த்தைகளையே தகுந்த வரிகளாய் கோர்த்து அதற்கு மெம்மேலும் வலிமை சேர்த்து எழுதுவதுனால் தான் சில குறிப்பிட்ட தத்துவங்களும் வாசகங்களும் நமது இதயங்களில் தடம் பதிக்கின்றன. வார்த்தைகள் வெறும் ஒலிக்கோர்வைகளால் மட்டும் இயற்றப்பட்டதல்ல அவை ஒவ்வொன்றும் நமது உணர்வுகளைக் கட்டி இழுக்கக் கூடிய வல்லமையோடும் பல அலைகளை உருவாக்கக் கூடிய பேராற்றலோடும் பிறப்பிக்கப்படுகிறன.எப்படிப் போற்றுதலுக்குரிய எழுத்தாற்றலுக்கு நல்ல சொற்கள் அவசியமோ அதே போல நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் வார்த்தைகளின் பங்கு அளப்பறியது. நமக்கு வேண்டிய விஷயங்களை அடைவதற்கும் நாம் சொல்லக் கூடியதை அடுத்தவர்கள் செவி சாய்ப்பதற்கும் நனி சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுப்பது பிரதானமாகிறது. உலக வரலாற்றின் ஏடுகள் கண்ட எத்தனையோ பெருந்தகைகள் தங்களுடைய பல்வேறு கருத்துகளை நம்மிலே விதைப்பதற்கு உதவிய பேராயுதமே சொற்கள் தானே. சொல்லியல் என்றொரு ஆழமான ஆயுதத்தை எவனொருவன் தன் வசமாக்கிக் கொள்கிறானோ அவனே வாழ்க்கையில் வாகை சூடுகிறான். நிகரற்ற எழுத்தாற்றலைச் செதுக்கிக் கொள்ளவும் நம்முடைய பிம்பத்தை பிரதிபலிக்கவும் மானிடனுக்கு கிடைத்திருக்கும் பெருங்கொடை, வார்த்தைகள். அவற்றை ஒரு போதும் நிந்தனைமிக்கவையாக்கி விடாதீர்கள்;அது ஏவுகனை போல் என்பதால் ஏவியனிடமே திரும்பி வரும். நன்றி வணக்கம்.

அன்புடன், டெல்வின்ராஜ்.

3 Comments

  1. சொல்லியல் மற்றும் அதன் சக்தி பற்றி அற்புதமான விளக்கம்

    ReplyDelete

Post a Comment

Post a Comment

Previous Post Next Post