சுயம் (Suyam)


 அன்பு உறவுகளே,

வணக்கம்.சுயம் என்றொரு ஆழ்ந்த தத்துவமே இன்று நம் கருப்பொருளாய் பூத்துள்ளது . அப்படி இந்தச் சுயத்தில் என்னதான் இருக்கிறது என்ற வினா உங்களது நெஞ்சங்களில் துளிர் விடலாம். சுயம் என்றாலே தனித்து நிற்றல் அல்லது நம்மை நம்பி நமக்கு நாமே உதவிக்கரமாக இருத்தல் அல்லது நம்மை நாமே அதிசயித்து பார்த்தல் என்று கூட சொல்லலாம். தன்னம்பிக்கை, மனப்பக்குவம், திறமை, தனித்துவம் மற்றும் நமது பழக்க வழக்கங்கள் போன்ற அனைத்துமே இதன் சாரம்சங்களாக திகழ்கின்றன. மேலும்,வாழ்க்கையின் இறுக்கமான சூழல்களில் உங்களை நீங்களே இழந்து விடாது இருப்பதற்கும் இந்தத் தத்துவம் பயன்படுகிறது.வழிப்போக்கரின் வார்த்தையெல்லாம்  உங்கள் வாழ்வில் தடைக்கல்லாய் வந்துவிட்டால் வெற்றியின் சிகரத்தை நாம் எவ்வாறு தொடுவது? என்னைப் பொறுத்தமட்டில் அடுத்தவரின் நிந்தனை சொற்களோ இல்லை,நமது தோல்விகளோ நம்மை வீழச் செய்வதில்லை;உங்களை நீங்களே இழக்கும் போதுதான் நீங்கள் தோற்றுப் போகிறீர்கள். வெற்றியின் போதையிலே தேங்கி நிற்பவனையும் தோல்வியில் தோய்ந்து கிடப்பவனையும் இந்த உலகம் ஏறெடுத்துக் கூட பார்க்காது. தன்மானம் எனப்படுவது நம்மைத் தூற்றுபவர்களிடமும் நாம் வீழ்ந்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டுபவர்களிடம் மட்டுமே புலப்படுத்தப்பட  வேண்டும்.தவறு செய்தாலும் தன்னை நிலை நிறுத்த முயல்வது மன்னிப்புக் கோராமல் இருப்பதற்குத் தன்மானம் என்று பெயர் சூட்டுவது போன்ற அறியாமைகளை ஆண்டவனும் மன்னிப்பதில்லை ."நான் இட்டப் பாதையிலே நான் செல்கிறேன்;என் மனம் சொல்வதை நான் கேட்கிறேன்" போன்ற எண்ணங்களுக்கும் எடுத்த முடிவுகளில் திண்ணமாக இருக்கும் மனப்பான்மைக்கும் நான் எதிராக நிற்பதில்லை.அத்தகைய நிலைகளில் நீங்கள் எடுத்திருக்கும் முடிவுகள் உங்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்து, உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு நெருடலைத் தந்தால் அதன் பெயர் தான் சுயநலம்.ஆனால், எல்லா சூழ்நிலைகளிலும் உங்கள் கனவுகளை நீங்கள் முடக்கிப் போட வேண்டிய அவசியமில்லை.

பல கவிஞர் பெருமக்கள் சொல்லியதைப் போல் அனைத்திற்குமே வரம்புகள் உண்டு; அறியாமையின் உச்சத்தில் நின்று தான் அறிவாளியென்று தம்பட்டம் அடிப்பவர்களைக் காலம் கண்டுகொள்வதில்லை. உங்களை நம்புங்கள், உங்களைப் போற்றுங்கள், உங்கள் திறமைகளை மதியுங்கள்;அனைவரக் காட்டிலும் தனித்திருங்கள், உங்களை இரசித்திருங்கள், எத்தகைய இடர்கள் வந்தாலும் உங்கள் புதுப்பித்து கொள்ளுங்கள்.நன்றி.

அன்புடன்,
டெல்வின்ராஜ்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post