அன்பு வாசகர்களே,
வணக்கம். இன்று மாறுபட்ட ஒரு கருப்பொருளில் என் சிற்றறிவுக்கு எட்டிய சிந்தனை துளிகளை இங்கே பாய்ச்ச வந்திருக்கிறேன். நவரசங்கள். நீங்கள் நினைப்பது போல் இது உடலின் வலிமைக்கு அருந்தும் இரசம் கிடையாது;உள்ளத்தின் நிலைப்பாடுகளைப் பறைசாற்றும் கண்ணாடி துகள்கள். குறிப்பாக பரதம் போன்ற நடனக்கலைகளில் ஒன்றைக் காட்சிப்படுத்துவதிலும் கதைமாந்தர்களின் உணர்வுகளை வெளிக்கொணர்வதிலும் நவரசங்களின் பங்கு அளப்பறியது.ஒற்றை வார்த்தையில் இதனைச் சாதாரணமாக 'உணர்ச்சிகள்' எனக்கூட சொல்லலாம். அவ்வகையில் அவற்றுள் முதல் மூன்று உணர்ச்சி வகைகளான 'ஹஸ்யா' அதாவது சிரிப்பு/மகிழ்ச்சி, ஷ்ரிங்காரா எனப்படும் அழகு/காதல் மற்றும் அட்புதா என்று சொல்லப்படும் ஆச்சரியம் ஆகியவையே இன்று நமது பேச்சுப்பொருளாய் உதித்துள்ளது. என்ன? இவற்றின் பெயரெல்லாம் வேற்றுமொழியில் ஒலிக்கிறதே என்ற ஐயம் உங்களுள் பிரசுரம் ஆகலாம். உணர்ச்சிகளின் ஊடகம் முகபாவனையும், பேசும் விதமும் , நடத்தையும் தானே தவிர அது சொல்வதை உள்வாங்கி கொள்வதே சிறப்பு.
சொன்னதைச் செய்யாமல் இங்கே வார்த்தை மழையை சொரியாமல் நமது கருப்பொருளுக்குள் முத்தெடுக்க புறப்படலாம். 'ஹஸ்யா'. இந்த உணர்வு தான் பல பேரின் துக்கத்தை மறக்கடிக்க செய்கிறது, அடுத்தவரின் துயரத்தை மறக்க வைத்து மகிழ்ந்திடவும் காரணமாகிறது. தோல்வியின் தொங்கலில் துவண்டு கிடப்பவர்களிடமும் அன்புக்கு ஏங்கி காலத்தைக் கழிப்பவர்களிடமும் புன்னகையொன்றைச் சிந்தி செல்லுங்கள், சிந்திய முத்துநகை கோர்வைகளாகி உங்கள் மன தோளை அலங்கரிக்கும். வறுமையிலே வாடி வதங்கிப் போயிருக்கும் உள்ளங்களில் சற்றே கருணை மாரி பொழிந்தால் எப்படிப்பட்டதொரு ஒளி அவர்களின் முகத்தில் சுடர் விடுகிறது. உன்னால் ஒருவன் மகிழ்ந்தால், சில நொடிகளுக்குத் தன் வேதனைகளைப் பிரிந்தால்;அதுவல்லவா பேரின்பம்?
காலமே தன்னைப் புதுப்பிக்க முயலும் தற்காலத்தில் மூன்றெழுத்துகளைக் கொண்ட சொற்கள் தான் அனுவாயுதங்களை விட அதீத சக்தி வாய்ந்தவைகளாய் இருக்கின்றன. அந்த வரிசையில் தான் அழகு/காதல் என்ற ஒற்றை சொல், அனைவராலும் அடைய விரும்பும் மகுடச்சொல், கேட்பதிலும் பார்ப்பதிலும் உணர்வதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அழகான சொல். பாருங்களேன்!அந்த சொல்லுக்கே அது தான் மெருகூட்டுகிறது. எது அழகு? கரிசல் காட்டில் நெய்ந்து வைத்தது போல் நீண்டிருக்கும் மங்கையரின் கூந்தலா? அம்பேய்தும் கண்களா? நவரத்தினங்களா? பரிசு பொருட்களா? இயற்கையின் இளமை மடியில் தாலாடும் கார்மேகமா? கிறங்கி விழ வைக்கும் மெய்சிலிர்க்கும் காட்சிகளா?தாய்தமிழைப் போற்ற வைக்கும் சாட்சிகளா? என்று அடுக்கிக் கொண்டே போனால் எதை தான் நான் அழகு என்று சொல்வது? உலகமென்பது தனி நபரின் பாரவையிலேயே அடங்கி கிடக்கிறது;அதனைப் பறித்து வந்து வெளியே காட்சிப்பொருளாக்குவதென்னவோ இயலாத காரியம்தான். யாவுமே அழகுதான், யாக்கையது பிரியும் வரை. காதல் எனப்படுவதும் வைத்து விளையாட பகடைக்காய் அல்ல, சமூகத்தில் தம்பட்டம் அடித்து கொள்ளும் விருதும் அல்ல;அது பேரன்பின் சிகரம்;யாரிடத்திலும் ஒளிரலாம் என்பதை உங்கள் நினைவில் செதுக்கி வையுங்கள்.
மேலும், வாழ்க்கையின் ஆதாரமே தேடல்கள் தான் என்ற சத்தியத்தை யாரால் மறுக்க இயலும்? அப்படிப்பட்ட தேடல்களில் கேள்விகள் மலர்வது நியாயம்தான். ஆனால், கேள்விகளே தேடல்களாய் மாறுவது தான் என்னைப் பொறுத்த மட்டில் 'அட்புதா' என்பது. விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் முடிச்சு போட எண்ணி அது இயலாமல் போக நீல வானத்தை அன்னார்ந்து பார்க்கும் மனநிலையே இது. அவிழ்க்கப்படாத, அவிழ்க்க முடியாத உலகின் பல சூட்சம முடிச்சுகளின் கடைசி வரியே, ஆச்சரியம். இயற்கையும் செயற்கையும் கலந்தாடும் இவ்வாழ்வில் ஆச்சரியங்கள் தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதை நிரூபிக்கின்றன .தேடுகின்ற தேடல்களுக்கெல்லாம் தெளிவு கிடைத்து விட்டால் அடுத்து வருபவர்களுக்கான கேள்விகளுக்குப் பஞ்சம் ஏற்படுமல்லவா?
மீதம் ஆறு உணர்ச்சிகளை விளக்கும் வரையில் விடைப்பெறுகிறேன்,நன்றி.
அன்புடன்,
டெல்வின்ராஜ்.
சிறந்த வரிகள். என்னை மெலும் புல்லரிக்க வைத்தது
ReplyDeletePost a Comment