நவரசங்கள் (2/3) (Navarasanggal Part 2)


அன்பு வாசகர்களே,

வணக்கம். சென்ற வாரம் நாம் கலந்துரையாடிய 3 உணர்ச்சிகளின் தொடர்ச்சியாய் இந்த வாரமும் புதிய 3 ரசங்கள் எனது பேனாவின் மைக்குழாயில் வழிந்தோட ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. இன்று இப்பாகத்தில் உங்கள் உள்ளங்களில் நான் வரைய போகும் இரசங்களானது பீபத்ஸா எனப்படும் அறுவறுப்பு, கருணை என்று சொல்லப்படும் 'கருணா' மற்றும் பயநகம் அதாவது அச்சம் என்பவையே.

அவ்வகையில் 'பொய்யான சில பேர்க்கு புது நாகரிகம், புரியாத பல பேர்க்கு இது நாகரிகம்' என்ற காவியக் கவிஞர் வாலியின் வைர வரிகள் பின்வரும் உணர்ச்சிக்கு நன்றாகவே பொருந்தும். பீபட்ஸா. வெறுக்கத்தக்க அல்லது முகம் கோண செய்யும் செயல்களை ஒருவர் செய்யும்போது நமது முகத்தில் தோன்றும் அறுவறுப்பானதொரு உணர்ச்சியே இது. ஞாலம் புரண்டோடுகிறது,கோடிக்கணக்கான நாகரிகங்கள் பிறந்தும், கொடி கட்டிப் பறந்தும், அழிந்தும் விட்டன. ஆனால், மனிதனின் வாழ்வியலில் சில கறைகள் இன்று வரையிலும் கலையபடாமல் படிந்த படியே இருக்கிறது. அடுத்தவரின் வெற்றியின் பால் ஏற்படும் பொறாமை, அதனைச் சீரழிக்க விரும்பும் எண்ணம், பணத்தின் பெயரிலே காகிதங்களை வைத்து ஒருவரை எடைப்போடுவது, மத இன பாகுபாடு போன்ற எண்ணிலடங்கா விஷயங்கள் நம்மிடையே அரேங்கேறி கொண்டேதான் இருக்கிறது.அது போன்ற இழிவான காரியங்களைச் செய்யும் கள்வர்களை குற்றவுணர்வில் நெலிய செய்வதே 'பீபட்ஸா'.

தொடர்ந்து, 'கருணா' என்று சொல்லப்படும் அர்த்தம் புதைந்த ஒரு இரசமே மனிதன் இன்னும் ஏதோ ஒரு வகையில் மாறாதிருக்கிறான் என்பதை அவ்வப்போது நமக்கு நினைவுப்படுத்துகிறது.சமமான நிலப்பரப்பில் வாழ்கிறோம், நேரம் கிடைத்தால் சமத்துவமும் பேசுகிறோம், மனிதமெனும் திரை போர்த்தி மண்ணுலகில் கயவர்களாகிறோம். அப்படிப்பட்ட கொடூரங்களின் உச்சபட்சத்தை அடைந்த கலியுகத்தில் கருணை எனப்படுவதே மனிதநேயத்தின் சாரம்சம். எத்தனை உலகநாடுகளில் குருதி வெள்ளம் வழிகிறது, மண்ணால் அரித்து திண்ணப்பட்டு, மண்டை ஓடுகளலான சாம்பிராஜியங்கள் பிறப்பிக்கப்படுகின்றன, எத்தனை அப்பாவிகளின் வேட்கைகள் வேரோடு பிடுங்கி எறியப்படுங்கின்றன. இதுவெல்லாம் கருணை என்றொரு பேருணர்வு மலர்ந்திருந்தால் நடந்திருக்குமா? கருணையின் வடிவான அந்த இறைவனின் கதிராய் நீங்களும் உருமாறலாம். எப்படித் தெரியுமா? முன் பின் அறியாதவரிடமும் அன்பு காட்டுதல், இன்னலில் தவிப்போரும் மேம்பட வேண்டுமென பிரார்த்தித்தல் இன்னும்,பிறர் வலியைக் கண்டு வழியும் கண்ணீர் துளி கூட கருணையெனும் அகண்ட நதியின் தொடக்க புள்ளிதான்.ஒவ்வொரு மனிதரின் உள்ளங்களிலும் ஏதோ ஒரு மூலையில் எஞ்சிக் கிடக்கும் கருணையெனும் மகோன்னதமானதொரு உணர்வுக்கே இந்த வையகம் காத்திருக்கிறது.

துளிர்விடும் வீரம் எல்லாம் துல்லியமாய் சிதையும் நொடி, நாபிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் வார்த்தைகள் நாவில் ததும்பி நிற்கும் பொழுது, அடங்கிக் கிடந்த நாடித்துடிப்பு அகந்தை மிக்கவனாய் நெஞ்சை அலங்கோலப்படுத்தும் நிமிடம், கண்களின் கருவிழியில் எண்ணங்கள் பறைசாற்றப்படும் நாழிகை. இவற்றையெல்லாம் நான் பயநகமென்று சொன்னால் அது எத்துணை பெரியதொரு இழிவு? பயம் அல்லது அச்சம் என்பதை வெறும் வீரத்தின் எதிர்ச்சொல்லாய் பாராது, அதை ஒரு மருந்தில்லா நோய் என்று சூளுரைக்கிறார் பாரதி. உனக்குள்ளிருந்து எழுந்து, தலைவிரித்தாடுவது இல்லை பயநகம் மாறாக, உன் பகைவனால் உனக்குள்ளே புகுத்தப்படும் நஞ்சு பொருளே அது. உனக்கென நீ இருக்கையில் நீதியது உன் கரங்களில் கிடக்கையில் வேறென்ன ஆயுதம் வேண்டும் நமக்கு? அச்சமெனும் இந்த வஞ்சகனை வெட்டிசாய்த்து அல்லவா நீங்கள் பீடுநடை போட வேண்டும்!இனியும் இந்தப் பயநகமெனும் ஆட்பறிக்கும் விஷப்பொருள் உங்கள் நெஞ்சிலே தஞ்சம் பெற வேண்டுமா? தூக்கி எரிந்துவிட்டு, எழுந்து வாருங்கள்!பார்த்து, வானம் உங்களின் தலையை முட்டிவிட போகிறது.

சந்திக்கலாம், புதிய 3 ரசங்களை மீண்டும் அடுத்த வாரம் ஆராயும் வரை.நன்றி.

அன்புடன்,
டெல்வின்ராஜ்.

1 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post