நவரசங்கள் (3/3 - Finale) (Navarasanggal Part 3)

அன்பிற்கும் மரியாதைக்குமுரிய தமிழ் நெஞ்சங்களே,


“நாட்காட்டி கூட சில நேரங்களில் மனிதர்களைப் போலவே நம்மைக் கோழைகளாக்கித் தான் செல்கிறது. கண் மூடித் திறப்பதற்குள்,சிறிது உயிர்வளியை நுரையீரலில் நிரப்பி விட்டு வருவதற்குள் நான் இந்த மூன்றாவது பாகத்தை எழுத வேண்டிய கடமை என்னைக் கடைந்துவிட்டது. எண்ணற்ற உணர்வுகளை வடிக்கட்டி, மனமெனும் அகண்ட சமுத்திரத்திலிருந்து இன்று உங்கள் எண்ணங்களைச் சற்றே தீண்டிப் பார்க்க கரை ஒதுங்கியிருக்கும் இரசங்களானவை சாந்தி என்ப்படும் அமைதி/நிம்மதி, வீரா என்றழைக்கப்படும் வீரம் மற்றும் ரௌத்திரம்(கோபம்) என்பவையே.


“ கம்பங்கூழ் திண்ணவனும் மண்ணுக்குள்ள, தங்கபஸ்மம் திண்ணவனும் மண்ணுக்குள்ள” என்ற பாடல் வரிகளை நீங்கள் சற்று கூர்ந்து பார்த்தால் தான் நிம்மதியும் அமைதியுமற்ற வாழ்கை வாழ்வதற்கே பயனற்றது என்ற ஆழமான உண்மை நமக்குத் தெரிய வருகிறது;புரிய வருகிறது. சாந்தி என்ற இந்த இறை தத்துவமானது செத்து போன பின்பு உங்கள் உயிர் ஜோதிக்குக் கிடைக்க வேண்டிய வெகுமதி மட்டுமன்று.மாறாக, இப்பூவுலகில் நீங்கள் வாழ்கையிலே உங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடைவெளியும் உங்கள் மனதிற்குத் தரப்பட வேண்டிய விருதும் கூட. பேரும் புகழும் புடைசூழக் கிடந்து, வெற்று தாட்களால் கைகள் நிரம்பி வழிந்து,போகும் திசையெல்லாம் இறுக்கத்தோடும் பதற்றத்தோடும் ஒரு வரையறைக்குள் வாழ்வது எத்துணைப் பெரியதொரு கொடுமை. பணத்தில் புரண்டு பரிமளிப்பவன் தான் “அதிக பணம் வாழ்க்கைக்கு ஆகாது” என்று தத்துவம் பேசுகிறான் . பணம் தேவை தான்; ஆனால். அதனை எண்ணியே உங்கள் நிம்மதியை நீங்கள் இழப்பது எவ்வளவு அவலத்திற்குரியது.


‘ஒரே பொருளைத் தரும் சொற்கள்’ என்ற இலக்கண சட்டம் எப்பொழுது நம் கல்வியலில் திணிக்கப்பட்டதோ அன்றே சில சொற்களுக்கிடையிலான வேறுபாடுகளை அலசி ஆராயும் திறமை நமக்குள் மடிந்துவிட்டது. அதில் கலந்துரையாடப்பட வேண்டிய ஓர் உன்னதமான சொல் தான் ‘ரௌத்திரம்’ எனப்படுவது.பாரதி தன் கவிதை முரசுகளில் கொட்டிப் பரப்பிய  ரௌத்திரம் என்பது வேறு நம்முள்ளே தோன்றிடும் ஆத்திரம் என்பது வேறு என்பதை மானிடன் முதலிலே புரிந்து கொள்ள வேண்டும். நம் முண்டாசு கவிஞன் நமக்குள் ரௌத்திரம் பழகு என்றதொரு வாசகத்தைப் புகுத்தியது தவறாகிவிட்டது.சமுதாயத்தில் சஞ்சரிக்கும் அவலங்களையும் நியாயமில்லா விஷயங்களையும் கண்டு நமக்குள் உதிக்க வேண்டிய ஆதங்கமே ரௌத்திரம். தீண்டாமையும்,நீதியின்மையும், குடியால் அழியும் சமூகத்தையும், தாய்மொழியை மதிக்காத மனிதர்களையும் சுட்டெரிக்கக் கூடிய அக்கினி பிழம்பே ரௌத்திரம்.அதனை அன்றாட வாழ்வியலில் பிறந்து மடியும் பயனற்ற கோபத்தோடு ஒப்பிடுவதே குற்றம் தான்.


இறுதியாக, பெண்மையின் உச்சமாய், வேரறுவா வேட்கையின் எச்சமாய் , கோமகனுக்குள்ளும் கோமனம் கட்டி நின்றருளும் ஆண்டிக்குள்ளும் கோலூச்சி நிற்க வேண்டிய மகோன்னதமான உணர்வே வீரமென்று அழைக்கப்படும் ‘வீரா’!நம்மை நிந்தனை சொற்களால் தாக்குபவர்களையும் நமது வெற்றியைச் சிதைக்க எண்ணும் இழிவான மனிதர்களையும் போராடி வெல்ல நமக்குள் பூக்க வேண்டிய பேருணர்வே வீரம். முறுக்கு மீசையும்,கட்டுடலும் ,தாழாத ஆண்மையும் அல்ல வீரத்தின் அடையாளங்கள்.தளராத மனதைக் கொண்டிருப்பதும்,நியாயத்தின் துகள்களை உள்ளத்தின் இடுக்கெங்கும் பூசி ,எதையும் எதிர்த்து போராடும் மனப்பக்குவமே வீரத்தின் திலகங்கள்.தலையே போனாலும் தலைமைத்துவத்தைக் கைவிடாத இராணி மங்கம்மாளைப் போல்,இன்னல்களைக் கண்டு இடிந்து போகாத பேராண்மையே வீரம்.உங்களுக்குள் உறங்கும் வீரத்தைச் சற்றே தட்டி எழுப்புங்கள்; அது எழுந்து கர்ஜிக்கும் நாளை எதிர்ப்பார்த்திருங்கள்.


இந்த 9 இரசங்களையும் ஆராய்ந்து எனக்குத் தோன்றிய கருத்துகளை இங்கே பதிவிட்டேன். அவற்றுள் குறைகள் இருப்பின் மன்னித்து, நிறைகளை ஏற்று கொள்ள வேண்டி விடைப்பெறுகிறேன். இத்தனை நாட்களாய் அதனைப் படித்து பயன்பெற்ற உங்களுக்கு என் நன்றிகள்.வணக்கம்.


அன்புடன்,

டெல்வின்ராஜ்.

4 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post