சுதந்திர காற்று: தருணங்கள்! (Suganthira Kaatru : Tharunangal!)

 


எனதருமை உடன்பிறப்புகளே,


பூமி பந்தை ஆராதிக்கும் கதிரவனிடமிருந்து என் அன்பு கலந்த வணக்கங்களை உங்களுக்குப் பரிசளிக்கிறேன். வரலாற்று ஏடுகளும் நமது பாட்டி தாத்தாக்களும் நமக்குக் கதைகளாய் சொன்ன சுதந்திர தினம் இன்றோடு நமக்குக் கிடைக்கப்பெற்று 64 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எத்துணைப் பெரியதொரு ஆச்சரியம்?! அரை நூற்றாண்டைக் கடந்து இன்று வரையிலும் மலேசியர்களினுள்ளே இளமை தோயாமல் தோகை விரித்தாடுகிறது இப்பெரும் விருது. காலம் ஒரு வகையில் “ராபின் ஹூட்டைக்” காட்டிலும் மிகப்பெரிய கள்வன் தான்; நம் அனுமதி இல்லாமலயே நமது கால சேமிப்பைத் திருடிச் சென்று விட்டான்.


இயற்கையும் இன்றியமையாத ஒற்றுமையும் தவழ்ந்தாடும் இந்த அற்புத மண்ணிலே…….புரிகிறது! பள்ளிக்கூடங்களில் எழுதிய அதே கட்டுரையை மறுபடியும் இங்கே வந்து ஒப்புவிக்காதே என்ற உங்களின் எண்ணம் எனக்குப் புரிகிறது. சரி! அனைத்து மலேசிய மக்களின் மனதிலும் கோலூச்சி நிற்கும் இந்தவொரு உவமையைச் சற்றே ஒதுக்கிவிட்டு, இந்தத் தேசம் நமக்குள் வரைந்திருக்கும் அழகிய நினைவுகளைத் தூசி தட்டி, அவற்றை உங்கள் உள்ளச்சுவர்களில் மாட்டுவதே இன்று எனது கடமை;பொழுதுப்போக்கும் கூட. 


நான் அப்படிப் போட்டு வைத்த பட்டியலிலேயே எனது சிந்தைக்கு எட்டிய, நான் என் பிறவி பயனாய் கருத கூடிய ‘நாசி லெமா’, ‘ரொட்டிச்சானாய்’, ‘கரி மீ’, ‘கரிப்பாப்’, ‘ஐஸ் கச்சாங்’ போன்ற இன்னும் பல உணவுகளே முதலிடம் வகிக்கின்றன. என்னைக் கேட்டால் நமது நாட்டின் கல்வியியலில் சிற்றுண்டி சாலையும் இவ்வளவு ஏன் ஒட்டு மொத்த மலேசியரின் வாழ்வியலிலேயே காலையுணவின் மகோன்னதத்தையும் யாரால் மறக்க முடியும்;மறுக்க முடியும்?கூலி வேலை செய்தாலும் கூரையைப் பிய்த்து கொட்டும் செல்வத்திற்கு அதிபதியானாலும் ஒரே விலையில், அதுவும் நியாயமன விலையில் விற்கப்படும் நாசி லெமாவும், சுட சுட சாம்பாருடன் கறியையும் சேர்த்து களிப்பு தரும் ‘ரொட்டிச்சானாயும்’, எத்தனை வாடிக்கையாளர்கள் வந்தாலும் வற்றாத அமுத சுரபியைப் போல் சுரந்து நமது நாவின் சுவையறும்புகளைப் பூக்க வைக்கும் உணவுகளும் அல்லவா நாம் இத்திருநாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சான்று.


மாலையிலே ஆதவன் தன் ஆத்திர கதிர்களை நம் மேல் வீசுகையில், வீதியிலே உலா வரும் ‘ரொட்டி அங்கிளும்’, நள்ளிரவிலும் நித்திரையின்றி ஓடிக்கொண்டிருக்கும் ‘நாசி கண்டார்’ கடைகளையும் காணாத மலேசியர்கள் இருக்க இயலுமோ? நமது பேச்சு வழக்கில் தனித்துவமாக சேர்க்கப்படும் ‘லா’ என்ற சிறப்பு அடைமொழியும், மலேசிய மக்களால் மட்டுமே அறியப்பட்டு அன்றாட வாழ்வில் உபயோகிக்கப்படும் சில வேற்று மொழி சொற்கள் தான் நமது பந்தங்களை இன்னும் பலமாக்குகிறது. எத்தனை தேசங்களுக்குக் கடல் கடந்து சென்றாலும் இந்த நாட்டிலுள்ள இன்பத்தைப் போல எங்கும் காண இயலாது.


வெறும் எல்லைகளை அமைத்து கொண்டு, கட்டுபோட்ட நிலப்பரப்பிற்குள் அடங்குவது அல்ல நாடு. மாறாக, எங்குச் சென்றாலும் தனது தாய்நாட்டில் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி ஏங்க வைப்பதே நல்லதொரு நாட்டின் வெற்றி திலகம்.


எத்தனையோ உலக நாடுகளில் அமைதியும் நிம்மதியும் சீர்குலைந்து ,பல ஜனங்களின் வருங்காலங்கள் நாசம் செய்யப்படுகின்றன. போரில் சிதைந்த பல கோடி குடும்பங்கள் தாங்கள் பிறந்து தவழ்ந்தாடிய தாய்தேசத்தை விட்டு புலம்பெயர்ந்து செல்லும் வலி எத்துணைப் பெரியது என்பதை அதனை உணர்ந்தவர்களே அறிவர். ஆனால்,அது போல் இல்லாமல் நமது அன்றாட வாழ்க்கை சுபிட்சமாய் வழிநடத்தப்படுகிறது என்பதை எண்ணி நாம் மனநிறைவடைய வேண்டும்.


ஏதோ சில பொறுப்பற்ற நபர்களாலும் விஷயங்களாலும் நமக்குள்ளான ஒற்றுமையும் தேசப்பற்றும் சற்றே பாதிக்கப்பட்டிருக்கலாம்.ஆனால், இது நம் பூமி!நம் நாடு! நாம் மலேசியர்கள் என்பதை மறவாதீர்!காரணம் அந்த ஓர் உணர்வே நம்மை நமது தேசிய கொடியைப் பார்த்து தலைவணங்க வைக்கிறது. நிலத்தாயின் கரிசனத்தில், இயற்கையின் தரிசனத்தில் ,மத இன பாகுபாடுகளை வெட்டி எரிந்த சமத்துவ ஞானிகளாய் வாழ்ந்திடுவோம்!வாருங்கள் மலேசியர்களே!நமது ஜனங்களின் நாயகர்கள் நமக்குப் பரிசளித்த ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நெஞ்சிலே ஏந்தி வாழ்வோம்!அழியாததொரு தேசப்பற்றில் சிலாகித்து இருக்கட்டும் உங்கள் உள்ளங்கள்!வாழ்க மலேசியா!அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். நன்றி!


அன்புடன்,

டெல்வின்ராஜ்.

4 Comments

  1. அற்புதமான வரிகள்; ஆழமான கருத்துகள்👍 அடுத்த தலைமுறை சிறப்பாய் வளர்ந்து கொண்டிருக்கிறது👍

    ReplyDelete
    Replies
    1. கருத்துகளுக்கு மிக்க நன்றி ஆசிரியை☺️

      Delete
  2. நம் நாடு மற்றும் அதன் சிறப்புகள் பற்றிய அருமையான விளக்கம்

    ReplyDelete
  3. Pramatham Delvin un varigal anaithum unmai thaan

    ReplyDelete

Post a Comment

Post a Comment

Previous Post Next Post