சர்ச்சைக்குரிய சில விஷயங்களைத் தீண்டாமல் வைத்திருப்பதும் வருங்கால சந்ததிக்கு உண்மையை எடுத்தியம்ப மறுப்பதும் சமூகவியலிலே எண்ணிலடங்காத தாக்கங்களை விதைக்க கூடும். இன்றைய நமது ஆராய்ச்சிக்கு ஆளாகி இருக்கும் ஒரு கருப்பொருளும் ஏறத்தாழ சர்ச்சைகுரியது தான்; ஆனால், விண் முட்டும் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் இக்காலத்திலும் நமது நெஞ்சத்தில் கோலூச்சி இருக்கும் ஒரு பெருந்தகையைப் பற்றி. வாசகர்களே, வணக்கம்.
தீண்டாமையும் மூடநம்பிக்கையும் தலைவிரித்தாயடிய ஒரு காலம். உலகிற்கே தலைசிறந்த நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்த தமிழினம் அறியாமையின் இருட்டில் புதைந்து கிடந்தது. விடியலுக்குக் காத்து கிடந்த கீழ்தட்டு மக்களுக்கு உதித்தது ஒரு பகுத்தறிவு பகலவன். அதன் கதிர்வீச்சுகளில் சாம்பலாக தொடங்கின சமூக வரம்புகளும் பாகுபாடுகளும். அந்தச் சூரியனைப் பெரியாரென போற்றியது வையகம். அச்சூரியன் இப்பூவுலகில் உதயமான நாள் இது. பெரியார் எனப்படுபவர் சாதியெனும் சாக்கடையைத் தூக்கியெறிந்தவர், இந்த வேலையை இவர்தான் செய்ய வேண்டும் என்ற கட்டமைப்பைத் தகர்த்தவர், சமூக அடுக்குகளில் உயர்ந்தவர்களே கல்வி கற்க வேண்டும் என்ற அநியாயத்தை முற்றாக ஒழித்தவர், இறைவனின் பெயரை வைத்து அப்பாவி மக்களை கோவிலுக்கு வெளியே நிறுத்தி அவர்களின் கண்ணீரில் களிப்புற்ற கயவர்களை முடக்கியவர்.இன்னும் எத்தனை பெருமைகள் தான் இந்த சமத்துவ தந்தைக்கு.
சமுதாய நம்பிக்கைகள் எனப்படுபவை ஒவ்வொரு கோணத்திலிருந்து ஆராயும்போதும் வெவ்வேறு வடிவில் காட்சியளிக்கின்றன. ஒன்று விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டவை, இன்னொன்று சமூக நலனுக்காய் அமல்படுத்தப்பட்டவை ,மற்றொன்று மானுடர்களின் ஒழுக்கத்தைப் பேண வழிவகுக்கப்பட்டவை. ஆனால், இதில் எவற்றிலுமே வரையறுக்க முடியாமல் தனக்குக் கிடைக்கப்பெற்ற உரிமைகள் வேறு எவருக்கும் கிடைக்க கூடாது என்ற வெறிக்கும் பெண்ணடிமையை வலியுறுத்தும் மூடநம்பிக்கைக்கும் வெளிப்படையாக சொல்லப் போனால் மூடத்தனத்திற்கும் எதிராக கேள்வி கேட்பதுவே பகுத்தறிவு. இதுவே பெரியார் தனது புரட்சியைத் தொடங்குவதற்கு அடித்தளமாகவும் அமைந்தது. சிந்தனைக்கே எட்டாத விஷயங்களை எதிர்த்து ஏன், எதற்கு, எப்படி என்ற வினாக்களைத் தொடுப்பதே இதன் சாரம்சம். அதுமட்டுமா? தனிமனித உரிமைகளைப் பெற போராடுவதும், தானும் இந்த உலகிலே சமமாய் வாழ பிறந்தவன் தான் என்ற ஆழ்ந்த தத்துவமும் தனக்கும் அனைத்து மனிதர்களைப் போலவே சம உரிமைகள் உண்டு என்பனவற்றைப் பறைசாற்றுவதே பெரியாரின் அடுத்த கொள்கை; அதை ஒரே சொல்லில் விவரிக்கப் பார்த்தால் சுயமரியாதை என்று சட்டென வார்த்தை கணைகளை வீசிச் செல்கிறாள் தமிழ்தாய். சரி. சுயமரியாதை, பகுத்தறிவு இவை இரண்டுமே தான் நமது பகுத்தறிவு பகலவனாம் தந்தை பெரியாரின் அடிப்படை கொள்கைகள். இந்த இரண்டு புரட்சிகரமான கொள்கைளும் இருக்குழாய் துப்பாக்கியாய் சிந்தனை தோட்டாக்களை அப்போது வேட்கையுடன் முழங்கியது; முழங்கப்பட்ட தோட்டாக்களில் சுட்டு பொசுக்கப்பட்ட அறியாமைகளே பல.
புத்தகங்கள் படிப்பதும் நாம் இன்று மேற்கொள்ளும் பல வழக்கங்களை இன்னார் மட்டுமே செய்ய வேண்டுமென்ற இழிவான நடைமுறையுமே பெரியாரின் ரௌத்திர மழைக்கு ஆரம்ப தூரலாய் விளங்கியது. அவரவர் செய்யும் வேலையைப் பொருட்டு வகுக்கப்பட்ட சமூக பிரிவுகள் எப்போது அந்தஸ்துகளாய் உருமாறியதோ அப்போது வீசத்தொடங்கியது இந்தச் சமத்துவ சூறாவளி. ஆனால், இன்றோ யார் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம் தங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்யலாம் என்ற ஒரு நிலை மலர்ந்து விட்டது; அந்நிலையை தமிழர்களுக்குக் கொடையளித்த கோமகன் பெரியார். ஆயிரமாண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரியக்கோயிலின் சுவர்களில் அரசர்களின் பெயர் முதல் அங்கே பணி புரிந்தவர்களின் ஆடையைத் துவைத்தவர்களின் பெயர்கள் வரை பொறிக்கப்பட்டிருக்கிறது என்றால் சமத்துவம் என்பது நமது இனத்தின் ஆதிவேர் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பகுத்தறிவின் மறுபாகமாய் இறை மறுப்பு கொள்கை மாறியதன் காரணம் வேறேதுமில்லை, விருப்பு வெறுப்பற்ற இறைவனையே சாதியெனும் சவப்பெட்டிக்குள் அடைத்ததும் ஆண்டவனின் பெயரை வைத்து மூடநம்பிக்கைகளைப் பரப்பி சமூகநீதியை ஒழித்ததுமே ஆகும் . உலகத்தின் உன்னதமான மொழியை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் ,அறிஞர்கள் பலர் போற்றும் தொன்மைமிகு பாரம்பரிய விருட்சத்தின் விழுதுகளாய் திகழ்கிறோம் ,இதைத் தாண்டி ஒரு பெருமை நமக்கு இருக்க முடியுமா?உங்கள் சிந்தனையைத் தட்டி எழுப்பிக் கேட்டு பாருங்கள். தமிழன் என்ற ஒரு பெருமை போதாதா நாம் மார்த்தட்டி வாழ்வதற்கு? எதற்கு இந்த அவலமான பாகுபாடுகள் வேறு?
ஆகவே, உலகெங்கிலும் சமத்துவமே நிலவி இருக்க வேண்டுமென்றும், கல்வியும் அறிவும் எல்லோருக்கும் சென்றடைய வேண்டிய விழுமியங்கள் என்பனவே தந்தை பெரியார் எழுப்பிய முரசொலியின் அதிர்வலைகள். வாருங்கள்! சமத்துவத்தை வலியுறுத்தி, பாகுபாடில்லா, சமூகநீதி நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம். வாழ்க பெரியார் புகழ்!நன்றி
அன்புடன்,
டெல்வின்ராஜ்.
Superb❤️
ReplyDeleteநல்லதொரு பதிவு டெல்வின் 🌹 இளம் வயதில் ஆழ்ந்த சிந்தனை. தொடரட்டும் உனது எழுத்துப்பணி👍🌹🌹🌹
ReplyDeleteமிக்க நன்றி ஆசிரியை
DeletePost a Comment