வழக்கமாக முன்னுரையை முடித்திட முந்தி நிற்கும் என் தமிழ் இன்று சற்று புதிய சொற்களுக்காக தன் வார்த்தை களஞ்சியத்தைத் தூறுவாரிக் கொண்டிருக்கிறது. தமிழுக்கு அங்குப் பஞ்சம் ஏற்பட்டிருக்காது என்ன எழுதுவதென்று அறியாமல் தஞ்சம் தேடும் என் நெஞ்சத்திற்குத் தான் அழுது புலம்ப சில ஆழ்ந்த வார்த்தைகள் தேவைப்படுகின்றன. நிலவைப் பற்றி ஆயிரம் கவிஞர்கள் பொய் சொல்லிருக்கலாம், மெய் சொல்லிருக்கலாம். ஆனால், இந்த நிலா எண்ணக் கடலில் விழுந்தவற்றைக் கரை சேர்க்கும் நிலா, அமாவாசையே கண்டிராத முழு நிலா, ஊடலால் வாடிய உள்ளத்திற்கு நீர் தெளிக்க வந்த நிலா. எவருமில்லை, விண் சேர்ந்த நம் பாடும் நிலா எஸ்.பி.பி அவர்கள். அன்பர்களே, வணக்கம்.
காலையிலே செவிப்பறைகளை அதிர வைக்கும் “ஹர ஹர சிவனே” தொடங்கி இரவினில் நித்திரை காண்கையில் “நிலவு தூங்கும் நேரம்” வரை அந்தக் குரல், தங்க குரல், ஓயாத சிங்க குரல் ஓய்ந்ததில்லை;களைப்புற்று கிடந்ததில்லை. இந்த உலகம் என்னை ஆழ்த்தும் பல சூட்சமமான விடயங்களுள் ஒன்று எப்படிச் சிலரின் படைப்புகள் வேறொரு உலகிற்கு அழைத்து செல்கிறது என்பதே. அவற்றுள் இவரும் ஒரு மனிதர் தான், நம்மைப் போல் தொண்டையிலிருந்து வருவதை தான் பாடுகிறார், வரிகளை உச்சரிக்கும் போதும் நம்மைப் போலே தான் உதடுகளின் நகர்ச்சியும் இருக்கிறது. ஆனால், ஏன் இந்த ஒரு குரலுக்கு மட்டும் இத்தனை மகோன்னதங்களும் காயத்தை ஆற்றும் பெரும் வல்லமையும். வியக்கிறேன்! இறைவனின் இன்ப கதிர்கள் இவரது நாபி கமலத்தில் சுரந்திருக்க வேண்டும்;இல்லாமலா இந்தக் குரல் நம்மை இத்தனை நாள் வசியம் செய்கிறது?
நமது செவி வழியே புகுந்து துரத்தினாலும் செல்லாத அளவிற்கு இந்தக் குரல் நமது இதயத்தின் முடுக்குகளில் ஒட்டிக் கொண்டது. சும்மாவா? பல மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், எத்தனை விருதுகள், மக்களின் அன்பு, தன் குரலால் ஆத்திரத்தில் திரிபவனையும் ‘அசால்டாக’ அடக்கும் தந்திரம். பட்டியல் நீள்கிறது;ஆனால் உங்கள் நேரமும் கழிகிறது. சாமனிய மனிதனின் தூர பயணத்திலும் வானத்தில் பறக்கும் வண்ண பறவைகளுக்கும் இவரது பாடல் தானே நிம்மதியை அளித்து கொண்டிருக்கிறது. இந்த மனிதனின் குரலில் நீங்கள் மயங்கி விழ ஆழமான வரிகளையோ அல்லது வார்த்தைகளையோ இவர் பாட வேண்டுமென்ற அவசியம் கிடையாது. மாறாக, அந்தப் பாடலின் தொடக்கத்தில் இவர் தரும் humming தான் இவரது கையொப்பம்;நமது இதயத்தைக் கேட்கும் விண்ணப்பம். சில குரல்கள் பழமையென முத்திரையிடப்பட்டு ஓரத்தில் ஒத்தி வைக்கப்படும், பல குரல்கள் கேட்க கேட்க சுவையைத் தரும் ஆனால், இந்த விசித்திர குரல்தான் கேட்காமலேயே உள்ள சுவர்களில் தன் வண்ணங்களைப் பதித்து விடும். இதயம் ஒரு கோவில், நிலாவே வா, மன்றம் வந்த தென்றலுக்குப் போன்ற பாடல்களில் தொடக்கமே தோராயமாக உங்கள் உள்ளத்தைக் கவ்வி கொள்ளும். எந்தத் தலைமுறையாலும் வெறுக்கப்படாத மறுக்கப்படாத ஓர் ஆளுமை எஸ்.பி.பி அவர்கள். பாடலின் சரணத்தில் ஆங்காங்கே குழையும் அந்த குரலுக்கு இதயம் அடிமையாகிறது, உள்ளத்தின் நிலைப்பாடுகளை எடுத்துரைக்கும் அந்த வரிகளுக்கு மனம் பறிப்போகிறது.
காலை முதல் மாலை வரை தமிழ் வானொலிகளை அலசி பாருங்கள் ஒரு எஸ்.பி.பியின் பாடல்கள் ஒலிப்பெறாத நாட்கள் இல்லை. நான் இங்குச் சொன்னதையே சொல்வதைப் போல் தோன்றலாம். என்ன செய்வது இந்தப் பெருந்தகையைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் வற்றாத கங்கையைப் போல் வார்த்தை தீர்த்தம் சுரக்கிறதே.
இதோ இந்த உயிர், பணிவின் சிகரமாய் இருந்து பரம்பொருளின் ஒலியைக் குரலாக்கிய அந்த உன்னதமான உயிர், இன்றோடு நம்மைப் பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. உலகையே ஸ்தம்பிக்கச் செய்த இந்த நச்சில் பேராசை பிடித்து நம் பாடும் நிலாவின் உயிரை விழுங்க நினைத்து. தீட்டிய திட்டமெல்லம் அந்த உடலுக்குத் தானே தவிர குரலுக்கு இல்லையே. அப்பாவி கொரோனாவின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன;கோறனியே, உடலை வேண்டுமானால் நீ விழுங்கியிருக்கலாம் ஆனால், நீ சூறையாட நினைத்த குரல் எங்களுடையது, எங்களுக்கானது. என்றும் நம்மோடு நம் பாடும் நிலா! வார்த்தைகள் தட்டுப்படுகின்றன, கண்ணீர் துளிகள் சரம் தொடுக்கின்றன. விடைப்பெறுகிறேன். நன்றி. ஒலிக்கட்டும் பாடும் நிலாவின் குரல் ஒ(ளி)லி!
அன்புடன்,
டெல்வின்ராஜ்
சிறப்பு... அருமையான வர்ணனைகளும் உன்னதமான அருஞ்சொற்களும். என்ன ஒரு மொழிநடை? ஆஹா... மெய்சிலிர்க்கிறது. வாழ்க வளமுடன். தித்திக்கும் செந்தமிழை எத்திக்கும் பரப்புவோம்.
ReplyDeletePost a Comment