மாறும் நாகரிகங்கள்
மாறா நாதவெள்ளங்கள்
காலங்கள் போனாலும்
சமூக கறைகள் விலகுவதில்லையே!
என்ற வாசகத்தோடு வார்க்கப்படுகிறது இன்றைய பதிவு. காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை உருமாற்றிக் கொள்ளும் மனிதர்களைத் தான் உலகம் உன்னித்து பார்க்கிறது. வயதென்பது ஓர் எண் தான், நரை முடியும் இளமையின் இனிமை தான் என்ற தத்துவங்கள் பலரால் உண்மையாக்கப்பட்டாலும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு சிலரே இந்த மகத்தான பெருமைக்கு உரித்தானவர்கள். அவ்வாறு காலத்தின் ஓட்டத்தில் தன்னையும் இணைத்த வண்ணம் ஓடியவர் தான் இந்தச் சன்னியாசி போல் உடுத்திக் கொண்டு சுகவாசிகளுக்குப் பாடல் எழுதும் காவிய கவிஞர். சுருக்கமாக சொல்லப் போனால் விறாமீன் சாப்பிடும் பிராமின். ஆம்! நம் வாலிப கவிஞர் வாலி அவர்கள் தான் இன்றைய எழுத்து வட்டத்தின் மையப்புள்ளி. வெள்ளை தாடி வைத்த இந்த மங்காத இளைஞனுக்குள் புதுமை பூக்காத நாளில்லை, எளிமை தமிழ் எழுந்திடாத பொழுதில்லை, உவமைகள் ஊர்வலம் வராத நேரமில்லை. 10000 பாடல்கள், 5 தலைமுறை கதாநாயகர்ளுக்கும் பாடல்களை எழுதிய பெருந்தகை, வார்த்தையில் ஜாலம் செய்யும் வாலிபம், நிஜ வாழ்வின் நிதர்சனங்களை அடிநாதமாய் அமைத்து முழங்கப்பட்ட வரிகள் அனைத்தும் காலத்தினால் அழிக்க முடியாதவை. தமிழ் திரையுலகில் எனக்குப் பிடித்த பாடலாசிரியரும் எளிய தமிழில் அனைவரும் பருந்தும் வகையில் கவிதை தரும் கவிஞரும் இவரே என்றால் அது மிகையாகாது. அவரின் பாடல்கள் அத்துணையும் இரசிக்கத்தக்கவை என்பதாலோ என்னவோ அவரின் ஒவ்வொரு பாடல் வரிகளையும் படித்து உவகை பெற இணையத்தளத்தில் அவ்வப்போது இறங்கிவிடுவேன். ஆக, 1931-ஆம் ஆண்டில் அக்டோபர் 29-ஆம் திகதி அவதரித்த காவிய கவிஞர் வாலியின் நினைவுகளைக் கொண்டாடவே இந்தப் பதிவு. சொல்ல வரும் கருத்துகளை இழப்பதற்குள் இந்த நாயகனின் சொல்லிசையைக் கண்டு களிப்போம் வாரீர்!
ரங்கராஜன் என்ற தனது இயற்பெயரை வாலி என்ற புனைப்பெயராக மாற்றி வைத்த வாலியின் பெயரைச் சொன்னவுடன் கேலி செய்யாதவர்களே இல்லை. வாலி என்ற பெயரை வாளி என்பதோடு ஒப்பிட்டு நகைச்சுவை என சொல்லி, அதனைச் சொன்னவர்களே சிரிக்கும் அக்கிரமங்கள் எல்லாம் அன்றும்;இன்றும் நடந்தேறி கொண்டுதான் இருக்கின்றன. சிறு வயது தொடங்கியே கலையெனும் கடலுக்குள் நன்கு நீச்சலடிக்கத் தெரிந்த வாலி அவர்கள் ஓவியம் வரைதலில் கைத்தேர்ந்தவர் என்பது பலரும் அறியாதது. அன்றைய அரசியல் தலைவர்களான காமராஜர், ராஜாஜி போன்றவர்களின் உருவப்படங்களை வரைந்து இரயில் வண்டியில் தன் ஊர் பக்கம் அவர்கள் வரும்போது தனது ஓவியத்தைக் காட்டி கையெழுத்து வாங்கியிருக்கிறார் இந்த ஓவிய கவிஞர். தமிழில் புலமை பெற்ற வாலி அவர்கள் ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளிலும் சிறந்து விளங்கியிருக்கிறார். தொடக்க காலத்தில் அதாவது தன் கல்வியை முடித்த பின் பல மேடை நாடகங்களை இயற்றி அதிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறார். திருச்சி வானொலி நிலையத்தில் பணியாற்றிய இவருக்கு டி.எம். சௌந்தராஜனின் பழக்கம் ஏற்பட்டு அப்போது டி.எம்.எஸி-ன் கோரிக்கைக்கு இணங்க அவர் எழுதிய பாடல் தான் “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கனவிலும் உனை மறவேன் முருகா” என்ற பாடல். இந்தப் பாடல் பலரின் அகங்களுக்குள் கண்ணீரையும், கந்தனுக்கே தமிழின் மேல் ஒரு வித மைய்யலையும் ஏற்படுத்தியிருக்கும் என்றால் அது கட்டுக்கதையில்லை. பின்னர், எம்.எஸ் விஸ்வநாதனைச் சந்தித்து எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற அன்றைய பல பிரபலங்களுக்குப் பாடல்களையும் இயற்றினார். எம்.ஜி.ஆர் அவர்களை மக்களின் பக்கம் கொண்டு சேர்த்ததில் அவரின் தத்துவார்த்தமான பாடல்களின் பங்கு அளப்பறியது. அப்படி வாலி அவர்கள் எழுதி எம்.ஜி.ஆரே நெகிழ்ந்ததொரு பாடல் தான் “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்” என்ற புகழ்பெற்ற பாடல். “கண் போன போக்கிலே கால் போகலாமா” , “காற்று வாங்க போனேன்”, “பச்சைக்கிளி முத்துச்சரம்” போன்ற பல பாடல்கள் தமிழர்களின் இதய கதவுகளை இன்றளவிலும் தட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படியே தமிழ் திரையுலகில் உயர்ந்து கொண்டு போன வாலியவர்கள் அன்றைய பாடல்களின் பிதாவான கண்ணதாசனின் தரத்திற்கு இணையாக வந்தார். ஆனால், அந்த இருவருமே தொழிலும் சரி ஆதரித்த கட்சிகளிலும் சரி காந்தத்தின் துருவங்களாய் எதிர்திசையில் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். என்னதான் எதிரெதிரில் நின்றாலும் கண்ணதாசனுக்கு வாலியும் வாலிக்குக் கண்ணதாசனும் ஆருயிர் நண்பர்கள் தான். இதை வாலியே பல இடங்களிலும் பதிந்திருக்கிறார். வாலி ஏதேனும் நல்ல பாடல்களை எழுதிவிட்டால் போதுமாம், உடனே வீட்டிற்கு அழைத்து வெகுமதிகளை அளிப்பாராம் கவியரசர். இன்னொரு நெகிழ்ச்சியான செய்தியானது கவியரசர் கண்ணதாசன் இறப்பதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் வாலியிடம் “நான் இறந்தால் எனக்கு இரங்கல் கவிதையை நீதான் புனைய வேண்டும்” என கூறியிருக்கிறார். அது போல் கவியரசரின் இரங்கல் கவியரங்கில் வாலி “படிக்கத் தெரியாத பலருள் எமனும் ஒருவன், யாருமே படிக்க முடியாத கவிதை புத்தகத்தைக் கிழித்து போட்டு விட்டான்” என கவிப்பாடி அனைவரையும் உருகச் செய்திருக்கிறார்.
காலம் நகர்ந்தது. வாலியின் புகழ் வையகமெங்கும் பரவ தொடங்கியது. இசைஞானி இளையராஜாவின் இசையில் காவிய கவிஞரின் வரிகள் சங்கமமாகி தமிழரின் செவியெங்கும் ஒலித்தது. முன்பே சொல்லியதைப் போல் வாலி அவர்கள் வார்த்தைகளை வைத்து ஜாலம் செய்வதில் வித்தகர் தான். ஒரு வார்த்தையை மாற்றிப் போட்டு அதற்கு மற்றொரு பொருள் தந்து அசத்தும் அசாத்திய கவிஞர். பாடலுக்குள் உலக நடப்புகளைக் கொண்டு வந்த சிற்பி. உதாரணமாக, 1980-களில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே ஏற்பட்ட காவேரி நதி பிரச்சனையையும் விலைவாசி ஏற்றத்தையும் நாசுக்காய் சிங்காரவேலன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘போட்டு வைத்த காதல் திட்டம்’ பாடலில் புகுத்தியிருப்பார் வாலி. குறிப்பாக, “காவேரி அல்ல அணைப் போட்டுக் கொள்ள இந்தக் காதல்.விலைவாசி போலே விஷம் போல ஏறும் இந்தக் காதல்” போன்ற வரிகள் வாலியின் வல்லமையின் ஆதாரங்கள். இதே பாடலில் இன்னொரு வரியில் “ரஷ்யாவைப் போலே உண்டாவதில்லை இந்தக் காதல்” என அன்றைய இரஷிய நாட்டின் பிரிவினையும் உவமையாக்கிச் சொல்லியிருப்பார் நம் காவிய கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர் தொடங்கி தற்போது அனைவராலும் விரும்பப்படும் சிவகார்த்திக்கேயன் வரை 50 ஆண்டுகளுக்கு தன் எழுத்துகளால் எத்தனை கவிஞர்கள் வந்தாலும் தனக்கென்ற பீடத்தைப் பிடித்து வைத்திருந்த வாலி தான் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய பாடல் தான் சிவக்கார்த்திக்கேயனின் எதிர்நீச்சல் திரைப்படத்தில் வந்த “வெளிச்ச பூவே” என்ற அற்புதமான பாடல். அந்தப் பாடலின் பல்லவி(முதல் வரி) அதிலேயே தமிழகத்தின் நடப்பை வாலி பொறித்திருப்பார். “ஓ மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே” என்ற வரியானது அந்தக் காலக்கட்டத்தில் தமிழகத்தில் அதிகம் நடந்த மின்வெட்டு சிக்கலையும் கதாநாயகனின் வாழ்வில் எப்படிக் கதாநாயகியின் வருகை வெளிச்சத்தைத் தந்தது என்பதையும் ஒருங்கே சொல்கிறது. அத்தனை வயதிலும் எப்பேர்பட்ட சிந்தனை இந்த வாலிப கவிஞனுக்கு.
கமல் ஹாசன் மற்றும் அமலாவின் நடிப்பில் வெளிவந்த சத்யாவெனும் திரைப்படத்தில் பூத்த “வலையோசை கலகலவென” என்ற பாடல் இன்று வரையில் அனைவரின் பாடல் பட்டியலிலும் இடம்பெறுகிறது. அந்தப் பாடலின் சரணத்தில் தோன்றும் “இராகங்கள் தாளங்கள் நூறு இராஜா உன் பேர் சொல்லும் பாரு” என்ற வரிகள் இசைஞானி இளையராஜாவின் திறமைக்கு வாலி அளித்த வெகுமதி. இதே போல் சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளிவந்த தளபதியெனும் திரைப்படத்திலும் நமது கண்களை நனைய வைக்கும் ஒரு பாடல் தான் “சின்ன தாயவள் தந்த இராசாவே” என்ற பாடல்.இந்த உணர்வுகளின் ஒலி இளையராஜாவின் மனதைச் சற்று சீண்டிதான் இருக்கிறது நமது கண்ணீரை உட்பட. காரணம் சின்னதாய் என்பது இளையராஜாவின் தாயின் பெயர். இராசா என்பதும் நமது இசையின் இராசா இசைஞானியைத் தெளிவாக குறிப்பிடுகிறது. வாலியின் எழுத்துகளில் நான் கண்ட தனித்துவமானது அந்தப் பாடலின் காட்சிக்கு உட்பட்ட விடயங்களைத் தாண்டி பாடலில் நடிக்கும்/இசையமைக்கும்/இயக்குபவர்களையும் கூடவே சொல்வது தான். அது போல் 2008-ஆம் ஆண்டு கமல் ஹாசனின் மாறுப்பட்ட நடிப்பில் வெளிவந்து தமிழ் திரையுலகில் தன் வெற்றி கொடியை நாட்டிய ஒரு திரைப்படம் தான்“தசாவதாரம்”. இந்தத் திரைப்படத்தில் வரும் முதல் பாடலான “கல்லை மற்றும் கண்டால்” பாடலை எழுதிய வாலி அங்கேயும் தனது சித்து விளையாட்டைக் காட்டியிருக்கிறார். பாடலின் ஒரு வரியில் “இராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான், ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணு தாசன் தான்” என்ற வரிகள் பல கோணங்களிலிருந்து சிந்தித்து பார்க்கும்போது பல அர்த்தங்கள் பொதிந்ததாக திகழ்கிறது. திரைக்கதையின் கோணத்திலிருந்து பார்க்கும்போது இராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான் என்ற வரி ரங்கராஜ நம்பியானவர் ஒருங்கே அருள் புரியும் தேவி லக்ஷ்மி மற்றும் பகவான் விஷ்னுவின் என்று விளங்குகிறது. இதே நிஜ வாழ்வில் பார்க்கும்போது ரங்கராஜ நம்பி பாத்திரத்தை ஏற்று நடிக்கும் கமல் ஹாசனின் தாய் தந்தையரின் பெயரும் இராஜலக்ஷ்மி மற்றும் ஸ்ரீனிவாசன் தான். சாமர்த்தியத்தின் உச்சமாய் வரிகளை வடித்திருக்கும் வாலியவர்களின் புகழுக்கு வரம்புகள் இல்லை.
தமிழ்தாய் ஈன்றெடுத்த இந்தச் சொல்வேந்தன் எழுதிய பாடல்களின் உச்சக்கட்டம் தான் “அம்மாவென்றழைக்காத உயிரில்லையே” என்ற பாடல். சங்கத்தமிழிலிருந்து எடுக்கப்பட்ட வரிகளைக் கொள்ளாமல் பாமரனும் கேட்டு கண்ணீர் வடிக்கும் தாயன்பைப் பறைசாற்றியதொரு பாடல் தான் இது. சாதாரண வரிகளாயினும் ஒவ்வொரு வரிகளிலும் மானிட வாழ்வியலின் வாசங்கள். அப்படிப்பட்ட இந்தப் பாடலை திருச்சியில் அமைந்திருக்கும் ஓர் ஐயப்பன் கோவிலில் செதுக்கி வைத்திருக்கின்றனர் என்றால் அது எத்துணைப் பெருமைக்குரியது. ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டிய உன்னதத்தை எழுதிய வாலிக்கு இதை விட ஒரு புகழாரம் இருக்க முடியுமா? முன்பே சொல்லியிருந்ததைப் போல் எழுத்தளவிலும் மனதளவிலும் வாலி தன்னை ஒருபோதும் புதுப்பித்து கொள்ள தவறியதில்லை. தற்கால மனிதர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை உள்வாங்கிக் கொண்டு பொருள் சிதையாமல் பாடல் எழுதுபவர் வாலி என்றால் அது மிகையல்ல. அவ்வாறு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் உதித்த பாடல் தான் “முக்காலா முக்காபலா” என்ற பாடலும் “முஸ்டஃபா முஸ்டஃபா” என்ற பாடலும். இன்னும் பல புதிய படைப்புகள் வரிசைக்கட்டி நின்றாலும் இதுவே வாலியின் புதுமைக்கு மைல்கல்லாய் இருந்தது. ஒரு இளைஞனின் இதயத்திற்குள் இணைந்து வரிகளை இயற்றும் வல்லமை இந்த வயதான வாலிபனின் இடத்தில் காலங்காலமாக இருந்திருக்கிறது. இது மட்டும்தானா என்று வாயைப் பிளந்தால், 2005-ஆம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் சூப்பர்ஹிட் பாடலொன்றைப் பரிசளித்தார் வாலி அவர்கள். அந்தப் படத்தின் இயக்குனர் சங்கர் அவர்கள் வாலியிடம் “secret of success” என்ற கருப்பொருளோடு பாடல் வேண்டுமென கேட்டபோது “சரி கமே பத நி சே மாத்தி யோசி that’s what we say” என்று ஏதோ கல்லூரி மாணவனைப் போல் எழுதி தந்தார் வாலி. அதனைக் கேட்டு பூரித்து போன சங்கர் அவர்களுக்கு சந்தை வியாபார முறையில் வெற்றியின் இரகசியத்தை ஊட்டி விட்டார் வாலி. அதாவது “கேட்டுக்கோ லக்கு கால் கிலோ லாஸ் கால் கிலோ
லேபர் கால் கிலோ சேத்துக்கோ பக்தி கால் கிலோ ஹோப்பு கால் கிலோ
டேலண்ட் கால் கிலோ எல்லாம் தான் சேர்த்து கட்டினால்
பெரிய பொட்டலம் சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்” என்று சொன்னவுடன் சங்கர் வாயடைத்து போய்விட்டார்;அது போல் பாடலும் பலரின் மனங்களைக் கொள்ளை கொண்டது.
இன்னும் ஏராளமான பாடல்களில் புதுமைகளைப் நுழைத்த வாலி சந்திரமுகி திரைப்படத்தில் “அண்ணனோட பாட்டு” என்ற பாடலில் “அகர்ந்தவில்லா நகர்த்து பேசு” எனும் வரியை எழுதியிருப்பார். இந்த வரியின் பொருளானது அர்த்தமில்லாத வார்த்தைகளைத் தவிர்த்திடு என்பதே ஆகும். இது போல் ஒஸ்தி என்ற திரைப்படத்திலும் அனைவரையும் ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் ஒரு பாடலான “கலாசலா” என்ற பாடலை எழுதியவர் கவிஞர் வாலி அவர்கள் தான். அப்போதே அவருக்கு 80 வயது ஆகியிருந்தது. ஒரு மனிதனிடம் பழகுவதாக இருந்தால் அவனின் எல்லா குணாதிசயங்களையும் நன்கு புரிந்து கொண்டு அதனைப் பல பாடல்களில் எழுதி, கேட்பவர்களை விந்தையில் ஆழ்த்துபவர் வாலி. வாலி அவர்கள் வந்தாலே அந்த இடத்தில் ஒரு கலகலப்பும் சந்தோஷமும் இருக்குமென பலர் சொல்லி நான் கேட்டதுண்டு. படத்தின் வெற்றிக்கு வாலி போன்ற அனுபவமிக்க பாடலாசிரியர்களின் பாடல் தரத்தில் மட்டுமல்லாமல் ஒரு விதத்தில் ஆசிர்வாதமாகவும் கருதப்படுகிறது.
2010-ஆம் ஆண்டு வந்த சிவாஜி படத்தில் இடம்பெற்ற அதிரடிக்காரன் என்ற பாடலாக இருக்கட்டும், இன்றும் பலரின் மனங்களைக் கட்டி இழுக்கும் முன்பே வா அன்பே வா என்ற பாடலாக இருக்கட்டும் காதலர் தினம் திரைப்படத்தில் எல்லோரையும் கும்மாளம் போட வைக்கும் “ஓ மரியா” பாடலாக இருக்கட்டும் வாலி ஒரு முதிர்ந்த வாலிபர் என்பதை சொல்லிச் செல்லும். எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலின் வழி ரஹ்மானின் அடிப்படை தத்துவத்தைச் சொல்லியதாக இருக்கட்டும்;இன்னும் எத்தனை பக்கங்கள் நான் எழுத வேண்டும் இந்த மகா கவிஞனின் பேராற்றலைச் சொல்வதானால். இங்கே சொன்னதென்னவோ கையளவு தான் கடலளவையும் சொல்ல வேண்டுமென்றால் காலத்தைத் தான் கடன் வாங்க வேண்டும். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் பங்காற்றிய இவர் கடைசியாக காவியத்தலைவன் திரைப்படத்தில் “அள்ளி வருகிறாளே” என்ற பாடலையும் நான் தான் பாலா என்ற திரைப்படத்தில் ஒரு பாடலையும் எழுதி தமிழ்தாயின் திருவடிகளில் தனது இறுதி சுவாசத்தைச் சேர்த்திருக்கிறார்
அத்தனையும் ஆராய்ந்து சொல்வதற்குள் என் ஆயுளே முடிந்துவிடும் போல. எம்.ஜி.ஆர் தொடங்கி சிவகார்த்திக்கேயேன் வரை அனைவரின் நெஞ்ச ஏட்டிலும் வாலியின் வரிகள் பத்திரமாக பதிக்கப்பட்டிருக்கின்றன. மூச்சுக்குழாயின் அருகே அறுவை சிகிச்சை செய்திருந்த போதிலும் பாடல்கள் எழுதிய இவருக்கு மரணமேது? 2013-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் திகதி மாதம் இந்தப் புவியுலகை விட்டு நீங்கிய இந்த மனிதனின் நினைவுகள் இன்னும் நமது இதயத்தில் அழியாது கிடக்கின்றன.அப்படிப்பட்ட சாகாவரம் பெற்றவரின் பிறந்தநாளில் அவரின் ஒரு சில கீர்த்திகளைத் தொகுத்து சொன்னதில் மகிழ்கிறேன். தனக்கு வயதாகிவிட்டது என்று ஒடுங்கி கிடக்கும் அத்துணைப் பேருக்கும் வாலி ஐயா ஓர் எடுத்துக்காட்டு. தமிழின் மாறாத இளமையைப் போல் வாலிப கவிஞர் வாலியின் நினைவுகள் நிலைத்திருக்கட்டும்;நிலைத்திருக்கும். நன்றி. சந்திப்போம்!உங்கள் கருத்துகளைக் கீழே பதிவிட மறவாதீர்.
அன்புடன்,
டெல்வின்ராஜ்.
நல்ல ஊக்குவிக்கும் கதை.. மேலும் இதுபோன்ற கதைகளை எழுதுக.வாழ்க வளமுடன்🙏🙏🙏
ReplyDeleteVaali-pattri arumaiyaana katturai
ReplyDeletePost a Comment