காடுகளில் விறகு வெட்டி, வயற்காட்டில் களை பிடுங்கி, களைத்து இல்லம் திரும்பி, நாளை செலவிற்குப் பணம் முடித்து, பானையிலே பொங்க வைத்த சோற்றை உண்டு மகிழ்ந்த மனிதனுக்கு ஏதோ ஒன்று தன் வாழ்வில் குறைகிறதென்று உறைத்திருக்கிறது;அப்படிக் கண்டுப்பிடிக்கப்பட்டது தான் கலை என்று என் மனம் சொல்கிறது. கற்பனையோ கற்சிலையோ இன்றைய கதை ஒன்றுதான், சினிமா! தெருக்கூத்தில் பாமரனைப் பரவசமாக்க துவங்கிய சினிமா இன்று திரையரங்குகளில் தேரோட்டி நமது வாழ்வியலில் அழிக்க முடியாத;அகற்ற முடியாத ஓர் அங்கமாகி விட்டது. சினிமாவின் வருகை இல்லாவிடில் எத்தனை பெரியதொரு பகுதி நம் வாழ்வில் வெற்றிடமாய் இருந்திருக்கும்?.நாடகமும் சினிமா தான், இரண்டு மணி நேரத்திற்கு நமது இருதயத்தைப் பறிக்கும் திரைப்படங்களும் சினிமாதான். என்ன, அனைத்தும் பல படிநிலைகளைக் கடந்து வந்து வியக்கத்தக்க பரிணாம வளர்ச்சிகளோடு பரிமளிக்கின்றன. அந்த வகையில் திரையிலே நமது கண்களில் பதியும் காட்சிகளைத் தாண்டி இன்னும் இலட்சக்கணக்கான விடயங்கள் திரைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கின்றன என்பதே என் சிந்தனை விருட்சத்தின் ஆணி வேர்கள். சொல்லப் போனால் திரைக்கு முன்பே இருந்தும் நாம் பார்க்க தவறிய சில இரகசியங்களின்/ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகும் விடயங்களின் தொகுப்பே இந்தப் பதிவு. (குறிப்பு: இங்கே சொல்லப்படும் விஷயங்கள் சில உங்களுக்குத் தெரிந்தவையாகவும் இருக்கும் தெரியாதவைகளாகவும் இருக்கலாம்;எனவே,படித்து மகிழுங்கள்)
இவை அனைத்துமே நான் ஆராய்ந்த, உறுதி செய்த ,அந்தந்தக் கலைஞர்களே சொன்னவைத் தானே தவிர நானே கட்டியெழுப்பும் கிசுகிசுக்கள் அல்ல. இங்கே சொல்லப்படுவது எதுவுமே சர்ச்சைக்குரியதும் அல்ல. தொடங்கலாமா? 1986-ஆம் ஆண்டில் வெளிவந்த புன்னகை மன்னன் திரைப்படம் உலகநாயகனையும் நடிகை ரேவதியையும் முன்னோடிகளாக வைத்து வெளிவந்து ,சினிமா உலகில் தனக்கென ஒரு சுவடைப் பதித்தது. வழக்கம்போல் இந்தப் படத்திற்கும் இசைஞானி தான் இசையமைப்பாளர். முக்கியமாக, இது தான் தமிழிலேயே முதன்முறையாக கணினிமயமாக்கப்பட்டு வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன இசை தொழில்நுட்பங்களை (SYNTHESIZER/CX5M) வைத்து இசையமைக்கப்பட்ட திரைப்படம் என்றும் புகழாரம் சூட்டப்படுகிறது. மேலும், பல ஆண்டு காலமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்த இசைஞானி இளையராஜா,கவியரசு கண்ணதாசன் தொடங்கி மதன் கார்க்கி வரை பல புதிய பாடலாசிரியர்களோடும் பணியாற்றியிருக்கிறார். ஆனால், அவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களோடு பணியாற்றிய இறுதி திரைப்படமும் இதே புன்னகை மன்னன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. செந்தமிழ் வரிகளால் செதுக்கப்பட்ட “இது ஒரு பொன்மாலை பொழுது” என்ற பாடல் காலத்தைக் கடந்தும் கலைத்தாயின் கமலங்களில் மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பாடல் தான் இசைஞானிக்கும் வைரமுத்துவிற்கும் இடையில் ஓர் இசை-தமிழ் உறவை அரும்ப வைத்தது. ஆனால், இந்த இரு பெருந்தகைகளும் சேர்ந்து வழங்கிய கடைசி பாடல் இதே புன்னகை மன்னன் திரைப்படத்தில் ஒலித்த “ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்” என்ற பாடல் தான். கருத்து வேறுபாடுகளால் முறிந்த அந்த நட்பு,ஒட்ட வைக்க முடியாத கண்ணாடி துகளாய் சிதைந்து தமிழ் திரையுலகில் அனைவரின் பாதங்களை இன்றும் சீண்டிக் கொண்டேதான் இருக்கிறது.
தொடர்ந்து, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகள் வைரத்தையும் சின்னாப்பின்னமாக்கி நம்மை மயக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்பதே நிதர்சனம். அப்படி அவர் எழுதி தமிழ் இரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஒரு பாடல் தான் கண்ணுக்கு மையழகு கவிதைக்குப் பொய்யழகு என்ற பாடல். எத்துணைக் கவித்துவமான வரிகளைப் புதைத்து வைத்திருக்கிறது அந்தப் பாடல் மரம் .உலகின் சிறு சிறு அழகுகளையும் அழகாக தொகுத்து வழங்கியிருப்பார் நம் கவிநாயகன்.. ஆனால், நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் வைரமுத்து அந்த வரிகளை மட்டும் எழுதி வைத்து அதனைப் பாடலாக்க பன்னிரண்டு வருடங்கள் காத்திருந்தார் என்று. ஆம்! போகின்ற இடத்திற்கெல்லாம் தான் கவிதை போல் எழுதிய அவ்வரிகளைக் கூடவே சட்டைப்பையில் வைத்து கொண்டு செல்வாராம். ஒரு முறை கூட பாடலுக்குத் தகுந்த சூழல் அமையவில்லையாம். சூழல் அமைந்தால் மெட்டு அமையாது;மெட்டு அமைந்தால் சூழல் அமையாது. இத்தகைய நிலையில் ஒரு முறை ரஹ்மான் அவர்கள் அவசரமாக ஒரு காட்சிக்குப் பாடல் வரிகள் வேண்டுமென்று கேட்டபோது தன்னிடம் மறைத்து வைத்திருந்த வரிகளை எடுத்து நீட்டியிருக்கிறார் வைரமுத்து. அதனை மெட்டுக்குள் அமரவைத்து பீ.சுசிலாவின் குரலால் அமரக்காவியம் ஆக்கிவிட்டார் நம் இசைப்புயல். பன்னிரண்டு வருடங்களாய் அந்த வரிகள் இருந்த தவத்திற்கு ஒரு வழியே தரமான மோட்சமும் கிடைத்தது. இதை தான் வைரமுத்து அவர்கள் ஓரு விழாவில் பேசும்போது “ஹார்மோனியத்தின் மீது உட்காராத இந்த வரிகள் ரஹ்மானின் கைவரிசையில் கைதியாகி விட்டது” என்று குறிப்பிட்டார். அதாவது இளையராஜாவோடு பணியாற்றுகையில் பாடலாக்க முடியாமல் போன அந்த வரிகள் இன்று ரகுமானால் சாத்தியமாகி விட்டது என்று தனது முன்னாள் நண்பன் இசைஞானியை நாசுக்காய் குறி வைத்தார் கவிப்பேரரசு வைரமுத்து. காலம் யாரைத் தான் விட்டு வைத்தது?!
எம்.ஜி.ஆர்,சிவாஜி,நம்பியார் போன்றவர்களின் வரிசையிலே இன்று வரையிலும் நமது நெஞ்சங்களில் அழிக்கவே முடியாத ஒரு பிரபலம்,நடிகர் என்றால் அது நம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்கள் தான். “சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்” என்ற பாடல் மெய்ப்பிக்கப்பட்டு பல நாட்களாகிவிட்டன. எத்தனை திரைப்படங்கள், அசாத்தியமான திரைக்கதைகள் அத்தகைய சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்களின் தொடக்கத்தில் இன்று நாம் காணும் “சூப்பர் ஸ்டார் ரஜினி” என்ற நீல நிற புள்ளிகளால் கோலமிடப்பட்ட ‘TITLE CARD’-ஐ வடிவமைத்தது அவரது மகள் சௌந்தர்யா தான் என்பது பலரும் அறியாத உண்மை. வார்த்தைகளின் எண்ணிக்கை எல்லை மீறிச் செல்கிறது ஆகவே, கடைசியாக ஒரேவொரு தகவலைச் சொல்லி மட்டும் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமைகளுள் திரு டி.இராஜேந்தர் எனும் பன்முக வித்தகரும் ஒருவர் என்பதே நிஜம். இவரைச் சக நடிகராகவும் சில படங்களுக்கு இயக்குனராகவும் பார்த்திருக்கிறோமே தவிர இவர் தமிழில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி. பன்முக வித்தகராக திகழ்ந்த இவர் இன்று பலரால் கேலிப்பொருளாக்கப்பட்டிருக்கிறார் என்பது வருத்தத்தில் ஆழ்த்துகிறது. நம்ப முடியாத இசை அமைப்புகளைத் தந்த டி.இராஜேந்தர் அவர்கள் தனது அசாத்திய படைப்புகளின் வழி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வல்லமை பெற்றவர் என்பதைச் சூளுரைக்காமல் இந்தப் பதிவு ஒரு நிறைவை நாடாது.
நிறைவாக..இல்லை இல்லை.இந்தப் பதிவின் நிறைவாக,இத்தனை நாட்களாய் நாம் கண்டு களித்து கொண்டிருந்த தமிழ் சினிமாவின் சில அவிழ்க்கப்படாத விடயங்களை இன்று நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சினிமா எனும் ஆழ்கடலில் முத்தெடுக்க கிளம்பியவர்கள் எவரும் மீண்டு வந்ததாய் சரித்திரம் இல்லை காரணம்,அந்தக் கடலில் முத்துகள் குறைவதில்லை. அது போலவே தான் இன்னும் பல வியப்புகள் நம்மை வியக்க வைக்க காத்திருக்கின்றன. உங்கள் ஆதரவு இருப்பின் இந்தப் பகிர்வை வரும் வாரங்களிலும் தொடரலாம்.உங்கள் கருத்துகளைக் கீழே பதிவிட மறவாதீர்கள். விடைப்பெறுகிறேன்.நன்றி,வணக்கம்
அன்புடன்,
டெல்வின்ராஜ்.
இன்னும் பல தகவல்களை அறிய ஆவலாய் இருக்கிறேன்...வாழ்த்துகள்��
ReplyDeleteSuperb article Delvind. Punnagai Mannan-lenthu start panni you managed to cover so many interesting facts until times of Superstar. I also learnt new things like the music technology used in Punnagai Mannan and many more. Wonderful and entertaining article❤ Definitely waiting for part 2��
ReplyDeletethank you Divin
DeletePost a Comment