சினிமா சினிமா (2/3) - Cinema Cinema (2/3)




நாளும் கிழமையும் நம் வசமில்லை

நகரும் நிமிடமும் நம் வசமில்லை

அதனால் கிடைக்கும் பொழுதில் மலர்தமிழ் இரசிப்பீர்

அது பொழியும் தேந்தமிழ் ருசிப்பீர்


கடந்த வாரம், சினிமா என்றதோர் இரகசிய கிடங்கைச் சுரண்டிப் பார்த்ததில் இந்த வாரமும் அந்த அகழ்வாராயும் பணியை தொடர  வேண்டுமென்ற வேட்கை எனக்குள் வேரிட்டது. ஆகவே, இன்றும் பல மெச்சதகு தகவல்கள் உங்களை விந்தையில் ஆழ்த்துவதற்காய் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. வாருங்கள்! கருத்து வானில் சிறகடித்து பறக்கலாம்.


அந்தப் பட்டியலில் 2005-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் புதியதொரு கதைக்களத்துடன் வெளிவந்து நமது இதயங்களில் இன்றும் நீங்காத ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் திரைப்படம் தான் “அந்நியன்”. தன் சாதாரண குணாதிசயங்களைக் கடந்து சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களை அடியோடு ஒழிப்பதற்காக ஓர் அவதாரமெடுத்து மற்றொரு வடிவத்தில் காதலையும் மோகத்தையுமே தன் முழு நேர வேலையாக கொண்டவனாகவும் இன்னொரு ரூபத்தில் நாட்டின் இறையாண்மையை மறவாமல் அப்பிராணியாகவும் நடித்து அசத்தியிருப்பார் விக்ரம். “சரி கதையைச் சொல்லைய்யா!” என்ற உங்களின் அவசர நிலை எனக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அப்படி இந்தத் திரைப்படத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசையமைத்த ஒரு பாடல் தான் “அண்டங்காக்கா கொண்டக்காரி” என்பது. அனைவருக்குமே பரிட்சயமான இந்தப் பாடலை தேனி மற்றும் மதுரை போன்ற வட்டார வழக்கு தமிழை வைத்து புனைந்திருப்பார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பாடலை இசையமைக்க ஹாரிஸ் அவர்களுக்கு மூன்று நாட்கள் எடுத்ததாகவும் இந்தப் பாடலைப் பயிற்சி செய்வதற்காகவுமே அப்பாடகர்கள் 5 நாட்களை எடுத்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இது மட்டும்தானா என்ற ஐயத்தில் இருப்பவர்களுக்குத் தொடந்து வரும் மற்றொரு தகவல் வியப்பூட்டும் வகையில் மலர்கிறது. 2017-ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 7-ஆம் திகதி அன்று இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், நடிகர் கார்த்தி மற்றும் அடித்தி ராவ் அவர்களை முன்னோடிகளாக வைத்து இசைப்புயலின் இசையில் வெளியேறிய திரைப்படம் தான் காற்று வெளியிடை. இந்திய விமானப்படையில் பணியாற்றும் ஓர் இராணுவ வீரனுக்கும் தன் தாத்தாவின் ஊரில் மருத்துவராக பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் இடையில் மலர்ந்து, சரிந்து ,மீண்டும் மலரும் காதல் தான் இதன் அடிரேகை. அவ்வாறு கதாநாயகனைக் கதாநாயகி முதன்முதலில் சந்திக்கும் போது வரும் பாடல் தான் “கேளாயோ” என்ற பாடல். இதனைப் பிரபல பின்னணி பாடகர் பென்னி டயால் அவர்கள் பாடியிருப்பார். அதிசயம் என்னவென்றால், இப்பாடலின் சரணத்தில் வரும் வரிகளான “நீயென்னை மறந்தால் காற்றும் கதறும்,கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்” என்பது ஒரு பெண் பாடுவதைப் போல் ஒலிக்கும். ஆனால், நிஜத்தில் அது ஆண் பாடகரான் பென்னி டயால் அவர்களின் குரல் தான் என்பதே நம்மை வாயடைக்க வைக்கிறது. தன் சாதாரண குரலில் பாடிய அவ்வரிகளை இரகுமான் அவர்கள் தொழில்நுட்பத்தின் உதவியோடு கண்டே பிடிக்க முடியாத அளவிற்கு ஒரு பெண் பாடகர் பாடுவதைப் போலவே மாற்றிவிட்டார்.


இந்தப் பகுதிக்கு முத்தாய்ப்பாய் விடியும் ஓர் அற்புத தகவல் நாம் பல முறை பார்த்தும் கவனிக்கத் தவறிய ஒரு தலைசிறந்த இயக்குனரின் சாமர்த்தியமே. புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் NGK போன்ற பல திரைப்படங்கள் இன்று வரை நம்மால் பேசப்படுவதன் காரணம் அந்த ஒவ்வொரு திரைப்படத்திலும் அதன் இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தந்த உழைப்பும் சிறு சிறு கூறுகளுக்கான முக்கியத்துவமே. அப்பேர்ப்பட்ட இயக்குனரைப் பாராட்ட இந்த ஒரு நாள் போதுமா? அத்தனை புதுமைகளும், அனார்ந்து பார்க்க வைக்கும் நுட்பங்களும் அதில் அடங்கியிருக்கின்றன. அதிலிருந்து ஒரு துகள் தான் பின்வரும் செய்தி. செல்வராகவனின் திரைப்படங்கள் அனைத்திலுமே ஒரு நடிகர் அல்லது ஒரு நடிகைக்கு மட்டும் தனியாக 'frame' அமைத்து விட்டால் அதாவது அந்தக் காட்சியில் அவர் மட்டுமே பிராதனப்படுத்திக் காட்டப்படுவது போல் அமைந்தால் அந்த நடிகர் கண் சிமிட்டாமல் வசனத்தைச் சொல்ல வேண்டும் என்பது நம்மை அதிசயத்தில் மூழ்கடிக்கிறது. அவ்வாறான காட்சிகளில் நடிகர்/நடிகைகள் கண்களையும் சிமிட்ட கூடாது, கொடுக்கப்பட்ட வசனங்களையும் தகுந்த உணர்ச்சியோடு சொல்ல வேண்டும் குறிப்பாக உடல் மொழியையும் கையாள வேண்டுமென்றால் இயக்குனர் செல்வராகவன் அவர்கள் ஏன் அனைவராலும் கொண்டாடப்படுகிறார் என்பது நமக்குப் புரிய வரும். இப்படித் தன் சிந்தனையில் உதிக்கும் அனைத்திற்குமே உயிர் கொடுத்து உயிர்பித்து தத்ரூபமாக வழங்கும் இவருக்கு நமது புகழாரங்கள். 


இன்று நீங்கள் வாசித்து மகிழ்ந்த இரகசியங்களும் தகவல்களும் உங்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் விடைப்பெறுகிறேன்,நன்றி வணக்கம். மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கும் வரை


அன்புடன்,

டெல்வின்ராஜ்.

1 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post