வருங்கால விடியல்களே,
வணக்கம். கண்களுக்குத்
தெரிவதெல்லாம் உண்மையுமில்லை; கண்களுக்குத் தெரியாதவையெல்லாம் பொய்யுமில்லை என்று ஏதோ
ஒரு சித்தனின் உளறல் இன்று எனது எழுத்து வண்டிக்கு அச்சாணியாகிறது. அந்த வரிசையில்
ஒலி அலைகளின் ஸ்பரிசங்களில் போர்த்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த உலகம் தான் எத்துணைச்
சூட்சமமானது. நுண்ணுயிரின் நகர்ச்சியிலும் மதம் பிடித்த யானையின் பிளிறலிலும் பிறப்பிக்கப்படும்
ஒலி தான் இந்த அண்டத்தின் இருதய துடிப்பு. மனிதனால் கேட்க முடிந்த ஒலி இந்த உலகின்
சிறு துகள் தான் என்றால், இன்னும் எத்தனை கோடி சத்தங்களைத் தான் இந்தப் பூமி மௌனமெனும்
கதவிற்குப் பின்னால் அடைத்து வைத்திருக்கிறது?
அறிவியலெனும்
அகண்ட நதிக்குள் உங்கள் சிந்தையை நீந்த வைக்கும் போது அதிர்வுகளாய் உருமாறி, அலைகளாய்
ஊர்ந்து வந்து, உங்கள் காதுகளின் வழியே புகுந்து, மூளையின் நரம்புகளைச் சீண்டிப் பார்ப்பது
தான் ஒலி என்று நமக்குப் புரிய வருகிறது. சரி! இது எல்லோருக்கும் தெரிந்தது தானே? இதில்
அதிசயிக்க வேறென்ன இருக்கிறதென்று கேள்வி எழுப்புபவர்களுக்கு மெய்ஞானம் விடையளிக்கிறது.
மதங்களையும்
நம்பிக்கைகளையும் இங்கே தூக்கிப் போட்டு விடுங்கள். நாம் வாழும் அகிலத்தின் அதிசயங்கள்
மட்டுமே இன்றும் எப்போதும் நமது கருப்பொருளாகின்றது. எப்படி மனிதன் இயந்திரங்களையும்
புத்தம் புதிய ஆக்கங்களையும் தயாரிக்கின்றானோ அது போலவே ஒலியும் உருவாக்கத்தக்கது.
இதோ இன்று இயற்பியலில் சொல்லப்படுவது போல் ஒலி எனப்படுவது அலைகளைத் தாண்டி அந்த அலைகளையே
கட்டியெழுப்பும் மூலக்கூறு கட்டமைப்பைத் (molecular/atomic structure)தான் சார்ந்திருக்கிறது.
தற்கால அறிவியலில்
பரிசோதிக்கவும் கற்பனை செய்து பார்ப்பதற்குமே கடினப்படும் அளவுக்கு அமைகின்றன பண்டைய
மனிதர்களின் கண்டுப்பிடிப்புகள். இஸ்லாமில் இறையனாருக்கு வழங்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட
எழுத்து வடிவமானது சில நுணுக்கமான நேர்மறை அலைகளின் வடிவமைப்பு என்கிறது ஓர் ஆராய்ச்சி.
இறைவன் எனும் சக்தி கிடங்கு அதாவது இந்த அண்டத்தையே கையில் வைத்திருக்கும் அந்த பரம்பொருளின்
பெயரைச் சொல்லி வடிவமைக்கப்பட்டது தான் இந்து மதத்திலும் பௌத்த மதத்திலும் தகடுகளில்
பொறிக்கப்பட்டு காணப்படும் chakra என்பது. இவையெல்லாம் கைகளுக்கு வந்ததையும்
சிந்தனையில் தோன்றியதையும் வைத்து வரையப்பட்டவை அன்று. மாறாக, சூட்சமமான அதிர்வுகளை
உருவாக்கும் அலைகளின் பிரதிபலிப்பு. இது போன்ற கட்டமைப்புகள் தான் ஆங்கிலத்தில் sacred
geometry என்றும் அழைக்கப்படுகிறது. கோவில்களிலே ஓதப்படும் வேத வாக்கியங்கள் அத்துணையும்
அதன் அர்த்தங்களைக் கடந்து அந்த ஒவ்வொரு சொல்லும் கொண்டு வரும் அலைகளுக்காகவே பிராதனப்படுத்தப்படுகின்றன.
புனித மந்திரங்களை
ஓதும்போது அங்கே ஒரு நேர்மறையான சக்தி வளையம் உருவாக்கப்படுகிறது. இது மந்திரமும் இல்லை
தந்திரமும் இல்லை! நமது எண்ணமெல்லாம் சென்றடையும் பிரபஞ்சத்தின் கோட்பாடு. சத்தத்தை
அடிப்படையாக வைத்தே பொருட்களின் நகர்ச்சியைக் கட்டுப்படுத்திய விடயமெல்லாம் கட்டுக்கதையில்லை.
திருமறைக்காடு என்று அழைக்கப்படும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலத்தில் திருஞானசம்பந்தரும்
அப்பரும் திருமுறைகளை ஓதி கதவுகளைத் திறக்க வைத்தனரே, இங்கே தான் விஞ்ஞானமும் மெய்ஞானமும்
ஒருங்கே காட்சி தருகிறது. ஈசனின் அருளைத் தாண்டி அந்தக் கதவுகளின் நகர்ச்சியை அவ்வொலிக்கதிர்கள்
எந்த அளவிற்குக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். கேரளாவின் பத்மநாபசுவாமி திருத்தலத்தில்
கோயிலின் அடியில் இருக்கும் இரகசிய அறைகளில் நான்காவது அறையைத் திறப்பது குறிப்பிட்ட
ஒலி அலைகளின் வழியே சாத்தியம் என்கின்றனர் அங்கே ஆராய்ச்சி செய்தவர்கள்.
Vibrations என்று
ஊடுருவும் அலைகளும்/அதிர்வுகளும் ஒரு பொருளை அதன் இயல்பான நிலையிலே வைத்திருக்க காரணாமகின்றது.இது
மட்டுமா? உயிரின் இயக்கத்தை நமக்குத் தெரியாமலே இயற்றும் சக்கரங்களைக் கூட இயங்க வைக்க
கால காலமாக சில ஆழமான உச்சாடனங்கள் தானே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மூலாதரமெனும்
குண்டலினி சக்தியை எழ வைக்க ‘லம்’ எனும் உச்சரிப்பும் உச்சந்தலையிலே நம்மைப் படைத்தவனோடு
நெருங்க வைக்கும் பரம் என்ற சக்கரத்திற்கு ‘ஞ்ச்’ என்ற ஒலியும் தான் ஆதாரமாய் அமைகிறது.
இந்த மந்திரங்களுக்குள் பொதிந்து கிடப்பது அர்த்தங்கள் இல்லை;நமது நாபி கமலத்தில் எழும்
ஒலியை உடல் முழுவதும் பரப்பி, உள்ளமெங்கும் நிரப்பி, இறையோன் துகளாக நம்மை உருமாற வைக்கும்
வல்லமை. ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் இந்த அண்டத்தின் சிதறலில் கிடைக்கப்பெற்ற அக்கினி
பிழம்பு. ‘ஓம்’ என்று சொல்லும்போது மனம் தானாகவே அமைதியடைகிறது காரணம், அது நமக்குப்
பரிசளிக்கும் அதிர்வுகள்;இந்த அண்டத்தின் பிரதிநிதிகள். ‘ஓம்’ எனும்போதே மன அமைதி பிறப்பதன்
பிண்ணனி என்னவென்று அறீவீரா? ஆம்! மௌனத்தில் பிறப்பிக்கப்பட்டு, மௌனத்திலே நிலைத்திருந்து
,மீண்டும் மௌனத்திற்கே திரும்புவதனால் தான் ‘ ஓம்’ எனும் ஒற்றைச் சொல்லுக்கு அத்துணை
மகோன்னதங்கள். தொண்டையில் எழும் ஒலிகளை விட நாபி கமலத்தில் சுரக்கும் குரலுக்குத் தான்
இந்த நிகரற்ற ஆற்றல் கிடைக்கிறது.
சில இசைக்கருவிகளை
வாசிக்கும் போது புல்லரிக்கிறது! பல பாடல்கள் ஏனோ நமக்குள் ஒரு சக்தி பிரலயத்தையே உருவாக்குகிறது.
ஏன் என்று வினா தொடுத்தால் அங்கும் ஒலியின் கோட்பாடுகள் தான் பதிலாய் வந்து விடிகிறது.
“நீட்டிக்கப்பட்ட ஒலி அலைகளே இசையாகிறது;அந்த இசையே நமக்குள் ஓர் உட்வேகத்தையும் அவ்வப்போது
அளித்து செல்கிறது”. ஒலிக்கோர்வைகளின் ஓங்கார ரூபம் இந்த உலகம்;அது சாதுவாய் அமைகயில்
இசை. ஆகவே, ஒலி தரும் ஒளியை நமது வாழ்வில் ஏற்றி வைத்து வெளிச்சத்தின் துணையுடன் இருள்
தன்னைக் கடந்திடுவோம். இன்னும் எத்தனை அதிசயங்கள் தான் வரிசைக்கட்டி நிற்கிறதோ? தேடுவோம்!
களைப்புற்று போகும் வரை தேடுவோம். உடலுக்குத் தானே களைப்பு; மனதிற்கு இல்லையே! விடைப்பெறுகிறேன்,
நன்றி.வணக்கம்.
அன்புடன்,
டெல்வின்ராஜ்.
ஒளிதரும் இருளுக்கு அறிவும் அகிலமும்
ReplyDeleteAmazing da 😘 I love ur first perengan it's damn true and the points where damn good
ReplyDeleteWow really nice
ReplyDeletePost a Comment