சினிமா சினிமா (Finale) - Cinema (Finale)



முகமில்லா காற்றுக்கும்

நுகரப்படும் மலருக்கும்

இடையில் பரிமளிக்கும் ஊடகம் மொழியானால்

மக்கும் மனிதனுக்கும்

மொழி தானே தாயகம்

மொழியிழந்தோர் விழியிழந்த குருடரின் அகம்


மேலே எழுதப்பட்டிருக்கும் தத்துவத்தை வைத்து இன்றைய தலைப்பை எடை போட வேண்டாம் என்ற கோரிக்கையை விடுத்த வண்ணம், சொன்னேன் தமிழ் வணக்கம். இந்தத் தளத்தில் எழுதப்படும் பதிவுகளை மேலும் சுவாரசியமாக்கவும் உங்களைச் சற்று சிந்திக்க வைக்கவுமே இது போன்ற சிறு சிறு கவிதைகளை நான் எழுதுவன் நோக்கம். கடந்த வாரம் உங்களோடு என் எழுத்துகளின் வழி உரையாட இயலாமல் போனதை எண்ணி வருந்துகிறேன். எப்படியோ யாரும் என் பதிவுக்காக காத்திருக்கப் போவதில்லை என்ற அலட்சியத்தில் அல்லாமல், உண்மையிலேயே ஒரு சில பணி நிமித்தங்களாக தான் எழுத முடியாமல் போனது. அதற்கு என் மன்னிப்புகள்!

இதற்கு முந்தைய பதிவுகளில் சொல்லியதைப் போல் கலை எனும் பெரும் விருட்சத்தின் விழுமிய விழுதான சினிமா பலர் தொங்கி விளையாட ஊஞ்சலாகியிருக்கிறது. அப்படி இன்று உங்கள் ஞான உள்ளத்தை ஊஞ்சலாட்டப் போவதும் இதே சினிமாவின் சொல்லப்படாத இரகசியங்கள் தான். நரம்புகளின் நெரிசலில் இரத்தம் புகுந்தோடி வருவதற்குள் இதோ மூன்று வாரங்கள் முடிந்து இன்று நாம் ‘சினிமா சினிமா’ எனும் கட்டுரை தொடரின் இறுதி பாகத்தில் (மூன்றாம் பாகம்) அடியெடுத்து வைக்கப் போகிறோம்.

உலகளாவிய தமிழர்களின் வாழ்வியலில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய பெருந்தகைகளின் பட்டியல் எண்ணிலடங்காதது;எண்ண முடியாதது. அது போல் சாமனிய தமிழனின் உதயத்திலும் உறக்கத்திலும் பிரித்தெடுக்கவே முடியாத ஒரு மேதை,ஞானி,சிகரம் என்றால் அது நம் இசைஞானி இளையராஜா அவர்கள் தான். எத்தனை பாடல்கள் காவியங்களாக்கப்பட்டிருக்கின்றன , ‘வயலின்கள்’[ இன்பம் கொழிக்கும் சுவர்ண வயலாகியிருக்கின்றன, புல்லாங்குழல் புவியுலகின் அடிநாதத்தைத் தீண்டிப் பார்க்கும் வல்லமை பெற்றிருக்கின்றன. இவை அனைத்தும் இந்த மேதையின் இசையினால் நடந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. நாம் காதில் புகுத்தி, ஓரத்தில் ஒத்தி வைக்கும் பாடலுக்குள் பல வியக்கத்தக்க நுட்பங்களைப் பொதித்து வைத்திருக்கின்றார் நம் இராகதேவன். அப்படி இசைஞானியே தன் திருவாய் மலர்ந்து சொன்ன விஷயங்கள் இன்றளவிலும் அதிசயிக்கின்றன. பொதுவாக, ஓர் இசையமைப்பாளர் குறிப்பிட்ட கால இடைவெளியில் குறைந்த அளவிலான மெட்டுக்களைத்(TUNE) தான் அமைக்க முடியும். ஆனால், இசைஞானி அவர்கள் 45 நிமிடங்களில் 9 மெட்டுக்களை அமைக்கும் பேராற்றலைப் பெற்றவர் என்பது ஒட்டுமொத்த இசையுலகையே விந்தையில் ஆழ்த்துகிறது. அவ்வாறு அவர் அமைத்த 9 மெட்டுகளுக்குள் இரு பாடல்கள் தான் “இராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ” மற்றும் “மாங்குயிலே பூங்குயிலே” என்பன. சரி அமைக்கப்பட்ட 9 பாடல்களுக்குள் இவற்றுக்கு மட்டும் அப்படி என்ன தனித்துவமென்று கேட்டால் இரு பாடல்களுமே ஒரே மெட்டு தான் என போட்டு உடைக்கிறார் இளையராஜா. ஆம்! அந்த இரு பாடல்களின் வரிகளையும் இரு மெட்டுகளோடு மாற்றிப் போட்டு பாடிப் பாருங்கள் இரு பாடலுக்குமே இரு வரிகளுமே பொருந்தும். அதாவது இராத்திரியில் பூத்திருக்கும் பாடலின் மெட்டுக்கு மாங்குயிலே பூங்குயிலே பாடலின் வரிகளையும், மாங்குயிலே பூங்குயிலே பாடலின் மெட்டுக்கு இராத்திரியில் பூத்திருக்கும் பாடலின் வரிகளையும் அமர வைத்து பாடி பாருங்கள்;சரியாக வரும்! அதெல்லாம் இருக்கட்டும், இரண்டுமே எப்படி ஒரே மெட்டாக அமையும் என்ற கேள்விக்கு பின்வரும் விடை வேள்வியாகிறது. ஒரு பாடலை இசையமைக்கும்போது அந்த ஒட்டுமொத்த பாடல், இசைக்கருவிகளின் இசை, பாடகரின் தொனி போன்றவையெல்லாம் எந்த வேகத்தில் செல்ல வேண்டுமென்ற கால பிரமாணம் (TEMPO) முன்பே தீர்மானிக்கப்படும். அது போல் இந்த இரு பாடல்களுமே ஒரு மெட்டை அடிப்படையாக கொண்டு இயங்குபவைத் தான் ஆனால், வெவ்வேறு கால பிரமாணங்களோடு பயணிப்பதால் தான் வேறுப்பட்டு ஒலிக்கிறது. அதுமட்டுமின்றி, பாடலுக்கான சூழலைக் கேட்டவுடன் இசைஞானி அவர்கள் ஹார்மோனியத்தின் மீது கைவைத்தால் போதுமாம், உலகமே மெய் மறந்து போகும் அளவிற்கு அவரை அறியாமலேயே இசை வந்து வடியுமாம். அப்பேர்பட்ட இசை எங்கிருந்து ஊற்றெடுத்து பொழிகிறதென்று அறிந்தால் தன்னால் இசையமைக்கவே முடியாது போய்விடும் என்கிறார் நம் மேஸ்ட்ரோ. சூட்சமங்களின் தொகுப்பு இந்த மாமனிதனின் இசை. பஞ்சமுகி என்ற புதியதொரு இராகத்தினைக் கண்டுப்பிடித்து இன்றும் மாறாத இசை தன்னை இந்த உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பெருந்தகையைப் பேசிக் கொண்டே போகலாம். கரையைத் தீண்டிச் செல்வது மட்டுமல்ல கடல் அலைகளின் கொள்கை கரையோரம் கிடக்கின்றனவற்றை அடித்து செல்வதும் அதன் பொழுதுபோக்கு தான். அந்த வகையில் இசைஞானியின் இசை கடலில் மீட்டப்படும் அலைகள், அது கரையில் எஞ்சிக் கிடக்கும் நமது துயர துகள்களை உள்ளிழுத்து செல்லுமென்பது நிதர்சனம்.

தொடர்ந்து, தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் எழுதிய ஒரு சிலருள் காலங்காலமாக புகழாரம் சூட்டப்படும் ஒரு கலைஞன் என்றால் அது உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் தான். இலாபத்திற்காக கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்காமல் புதியதொரு சகாப்தத்தைப் படைப்பதற்காக கதையமைக்கும் வெகு சிலருள் இவருக்கான பங்கு அலாதியானது. வசனங்களை வெளிக்கொணர்தல், வசனங்களின் புள்ளிதோறும் புது புது அர்த்தங்களைப் புதைத்து வைத்தல், கண்ணிலே கதை கூறும் பேராற்றல் இவையெல்லாம் இவரின் புகழொலிக்குப் பேரிகையாகின்றன. அப்படி அவர் நடித்த திரைப்படங்களுள் இன்றும் பேசப்படும் ஒரு திரைப்படம் தான் ஆளவந்தான். இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருக்கும் கமல் ஹாசனும் உண்மையிலேயே இரு முறை பணிப்புரிந்த படக்குழுவினரும் அரும்பாடுப்பட்டு தான் திரைப்படத்தை முடித்திருக்கின்றனர். அந்தப் பட்சத்தில் கமல் ஹாசன் தனது இரட்டை வேடங்களுள் இராணுவ அதிகாரியாக ஒரு வேடத்தில் நடித்திருப்பார். இந்த இராணுவ வேடத்தில் நடிப்பதற்காகவே அவர் இந்திய இராணுவ படையில் 6 மாதக் காலம் இராணுவ பயிற்சி மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது;அது உண்மையும் கூட. ஒருப்புறம், நடிக்கும் கதாப்பாத்திரத்தில் தன் சிறப்பை வழங்க பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த கமலுக்கு இன்னொரு சுமையும் வந்து விடிந்தது. ஆனால், அந்த சுமையையும் சுகமாக உருமாற்றிக் காட்டியிருக்கிறார் நம் உலகநாயகன். அந்தச் சுமையானது வேறேதுமில்லை கமல் ஹாசனின் இரு வேடங்களுக்கும் தனி தனியாக படப்பிடிப்பு நடத்த முடிவெடுத்ததே ஆகும்.

அதாவது முதல் பாகத்தில் இராணுவ வீரர் வேடத்தில் நடித்து முடித்த பின்னர் இரண்டு மாதம் கழித்து மாறுபட்ட உடல் கட்டமைப்போடு 'நந்து' என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க நேரிட்டது. அதுவும் ஒரே நேரத்தில் அல்லாமல் இரண்டு கதப்பாத்திரங்களின் படப்பிடிப்பிற்கும் இரண்டு மாத இடைவெளி வேறு. அந்த இரண்டு மாதத்திற்குமே அமைக்கப்பட்ட இட அமைப்பு (set) போன்றவையெல்லாம் துளி கூட மாறாது அப்படியே இருத்தல் வேண்டும். குறிப்பாக, இரண்டு பாத்திரங்களும் சந்திப்பது போன்று அமைந்திருக்கும் காட்சிகள் எல்லாம் பிசிரு தட்டாமல் இருத்தல் வேண்டும். ஒரே நேரத்தில் இது போன்ற இரட்டை வேடங்களைச் சுலபமாக செய்துவிடலாம். ஆனால், பல நாட்கள் கழித்து அனைத்தையுமே மீண்டும் செய்வது எத்துணைச் சிரமமானது.

ஆக, இந்தக் கட்டுரை தொடரின் இறுதி கட்டமாக மலர்கிறது பின்வரும் இரகசியம். இயக்குனர் பாலாவின் இயக்கத்தில், நடிகர் ஆர்யாவின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி தமிழ் இரசிகர்களின் மத்தியில் பெரிதும் கவனிக்கப்பட்ட ஒரு திரைப்படம் 'நான் கடவுள்'. அப்படி அந்தத் திரைப்படத்தில் முற்றிலும் வேறுப்பட்ட வடிவத்தில் அவதரித்த ஆர்யாவின் அகோரி கதாப்பாத்திரத்தை உண்மையிலேயே நடிக்க இருந்தது புகழ்பெற்ற நடிகர் அஜித் அவர்கள் தான். அதற்காகவே நடிகர் அஜித் தன் முடியை நீளமாக,சடை போல் வளர்த்து இருந்தார். இவ்வளவு ஏன் படத்தின் 'போஸ்டர் லுக்' (Poster look) -க்கான படப்பிடிப்பு கூட நடந்தேறி இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் இயக்குனர் பாலாவிற்கும் நடிகர் அஜித்திற்கும் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடுகளால், முரண்பாடுகளால் அஜித் அந்தத் திரைப்படத்திலிருந்து விலக முடிவெடுத்தார் என்பது பலரும் அறியாதது. ஆகவே, இத்தனை நாள் இந்தக் கட்டுரை தொடருக்கு நீங்கள் அளித்து வந்த ஆதரவை எண்ணி மகிழ்கிறேன்;நெகிழ்கிறேன். உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எப்போதும் சொல்வது போல் இன்னும் பல ரகசியங்கள் நமக்காக புதைந்து கிடக்கின்றன;அவற்றைத் தோண்டி எடுத்து மகிழ்வோம். உங்கள் கருத்துகளைக் கீழே பதிவிட மறவாதீர். வாழ்க தமிழ்! வணக்கம்! 


அன்புடன்,

டெல்வின்ராஜ்.


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post