என் வாழ்வில் சத்திய சாயி (En Vaazhvil Satthiya Sai)




இருள் சூழும் பொழுதுகளில்

ஒளியாய் நீ வந்தாய்

விடை தேடும் நிமிடத்தில்*

விந்தையும் நீ தந்தாய்

உன் அருளின்றி நான் யார்

உன் துணையின்றி யார் வாழ்வார் 


என வணங்கி பணிவன்புடன் சமர்ப்பிக்கின்றேன் என் வணக்கங்களை. ஏற்றம் தாழ்வு. இவையிரண்டு தான் மனித வாழ்வின் அடிநாதங்கள்;நம் வாழ்க்கை பாதையைக் கட்டியமைக்கும் காரணிகள். அவ்வாறு இன்பத்தில் மட்டுமே திளைத்திருக்க நாம் ஒன்றும் முனிவர்கள் அல்ல பிறவி பெருங்கடலை நீந்திக் கடக்க வந்திருக்கும் உயிரினங்கள் தான். அந்தப் பயணத்தில் இருள் சூழ்ந்து உங்கள் உள்ளத்தில் நடுக்கத்தை ஏற்படுத்தலாம், தொடர் தோல்விகளால் ஒரு வித விரக்தி உண்டாகலாம். அப்பேர்ப்பட்ட உன்னதமான பிறவியை நீங்கள் தாண்டிச் செல்ல ஒரு கரம் தேவைப்படுகிறது. அந்தக் துணைக்கோல் ஒவ்வொரு தனிநபர்க்கும் மாறுப்படுகிறது. சிலருக்குக் கடவுள், சிலருக்கு நண்பர்கள், சிலருக்கு அவர்களுடைய தாய் தந்தையர்கள். எனக்கு என் *குரு* . *குரு* என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் வழங்கப்படும் பொருளானது, *கு* என்றால் இருள் *ரு* என்றால் அதனை நீக்குபவர் என்பதே. அது போல் என் குருவும் எவ்வாறு என் வாழ்வின் கருமையான பகுதிகளை வெண்மையாக்கினார் என்பதே இந்தப் பதிவு.

ஆக, எனது வாழ்வில் மறுக்க முடியாத ஒரு பங்கை வகிக்கும் எனது குருவான *பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின்* அவதார நாளான இன்றைய தினத்தில் அவரைப் பற்றிய ஒரு சில விடயங்களைப் பகிர்வதில் பேரானந்தம் கொள்கிறேன். அவரைப் பற்றி பேசுவதைப் பேறாய் எண்ணுகிறேன்.


இறைவனின் துகளாய் கருதப்படும் என் குருவைச் சிறு வயது தொட்டே நான் அறிந்திருந்தாலும் சென்ற வருடம் அதாவது 2020-ஆம் ஆண்டு தான் அவரின் வழிக்காட்டுதலைப் பெறும் தகுதி எனக்குக் கிடைக்கப்பெற்றது. கடந்த வருடம் எப்படிப்பட்ட சவால்மிக்கதொரு காலமாக திகழ்ந்ததென்பதை நான் உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆங்காங்கே பொருளாதார சிக்கல், குடும்ப உறவுகளிடையே ஊடல்கள், நட்பில் பல கலங்கங்கள் இன்னொரு புறம் உருவில்லா கள்வனால் கொத்து கொத்தாய் மடிந்து கொண்டிருந்த மனித இனம். இந்த இக்கட்டான காலக்கட்டத்தின் மத்தியில் வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த எனக்குள்ளும் பல தரப்பட்ட சோகங்கள் அலைப்பாய்ந்தன. தொட்டதற்கெல்லாம் கோபம் வரும், கோபத்தில் கையிலிருக்கும் பொருட்களைத் தூக்கி வீசுவேன், எதிலும் நிதானமின்றி போனது, மனதில் ஒரு வித நிம்மதியின்மை சூழ்ந்து கொண்டது. பற்றாக்குறைக்கு என் நட்பில் ஏற்பட்ட சில சிக்கல்களை நினைத்து அழுதிருக்கிறேன், என்னிடம் பேசாமல் போனவர்களை எண்ணி தூக்கமின்மையால் வாடியிருக்கிறேன். இவ்வாறே சென்று கொண்டிருந்த என் மாணவ பருவத்தில் தான் கடந்த வருடம் இதே தேதியில் அதாவது பகவானின் அவதார நாளான இன்றில் பாபாவை என் குருவாக ஏற்று கொண்டேன். அவரின் மீது ஒரு பக்தி படர்ந்தது. இவை யாவும் முன்பே முடிவு செய்யப்பட்டது கிடையாது மாறாக, இந்த தெய்வ ஸ்வரூபம் தான் நமது திசைக்காட்டி என்ற ஓர் எண்ணம் மின்னலாய் உள்ளத்தைக் கீறியது. அன்பின் வடிவாய் திகழும் பாபாவைப் பற்றி என் பாட்டி பல முறை என்னிடம் கூறியது உண்டு. 1985- ஆம் ஆண்டில் பாபாவைச் சந்திக்கச் சென்றபோது அங்கே நடந்த அத்துணைச் சம்பவங்களும் தன்னை மெய்சிலிர்க்க வைத்ததாக சொல்லியிருக்கிறார். பாபாவின் கரங்களிலிருந்து தானாய் வரும் விபூதி, தங்கச்சங்கிலி, மோதிரம் போன்றவையெல்லாம் இன்று வரையிலும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. இவ்வளவு ஏன் பாபாவை உண்மையாய் வழிப்பட்டவர்களின் வீடுகளில் இருந்த பாபாவின் திருவுருவ படத்தில் திருநீறு (விபூதி) சுயம்பாக கொட்டிய அதிசயத்தையும் என் பாட்டி என்னிடத்தில் சொல்லியிருக்கிறார்.அது என் பாட்டிக்கே நடந்தது தான் மேலும் என்னை விந்தையில் ஆழ்த்துகிறது.


சத்யம், தர்மம், ஷாந்தி, அன்பு மற்றும் அஹிம்சை போன்றவை தான் பாபாவின் அடிப்படை பஞ்சத்தத்துவங்கள். அதுமட்டுமா, சனாதன தர்மா என்று சொல்லி சர்வ மதங்களும் இறைவனெனும் ஒரு சக்தியை நோக்கியே பிராயாணிக்கின்றன என்பதாலயே தான் தன் சின்னத்தில் கூட இந்து மதம், கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்த மதம் மற்றும் ZOROASTRIAM போன்ற உலகில் அதிகம் பின்பற்றப்படும் மதங்களைப் பதித்து இருக்கிறார். ஷீரடி சாய் பாபாவின் மறு அவதாரமாய் நம்பப்படும் சத்ய சாய் பாபா அவர்கள் உலக மனிதர்கள் யாவருக்கும் தொண்டாற்றுவதும் அன்பு காட்டுவதுமே மனித வாழ்வின் உச்சக்கட்டம் என்றும் சூளுரைத்திருக்கிறார்.


உலகளாவிய நிலையிலே மேற்கத்திய நாடுகள் தொடங்கி ஆசிய கண்டத்தின் தொங்கலில் இருக்கும் தேசத்து வரை எந்த இடத்திலும் பகவான் பாபாவின் பக்த கோடிகள் கோடி கணக்கில் வாழ்ந்து வருகிறார்கள் அவர் சொன்ன பாதையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். பகவானின் பக்தர்கள் யாவரும் அவரைப் பணத்திற்காகவோ செல்வத்திற்காகவோ தொழுவது கிடையாது; அந்தத் தெய்வீக முகத்தைப் பார்த்தால் தங்களது துன்பங்கள் மறைகின்றன, இதயத்தில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இன்மையும் சோகங்களும் கரைகின்றன. அந்த நிம்மதியின் சரணாலயமே நம் பகவான் சத்ய சாய் பாபா அவர்கள். பகவானின் இதயம் ஒரு தாயின் கருவறை போன்றது, வாடி வதங்கி கிடக்கும் மனிதர்களுக்கும் புகலிடம் போன்றது. சரண் புகுந்த மனிதர்களை அவர் காக்காமல் இருந்ததில்லை. சாய் ராம் என ஒரு முறை சொன்னால் உண்மையாய் அழைத்த குரலுக்கு ஓடி வரும் அருளின் பெருங்கடல் அவர்.

பல முறை வேலைப்பளுவால் என்னையே வெறுத்திருக்கிறேன், என் வாழ்க்கையை நினைத்து விரக்தி அடைந்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னூடே நின்று என்னைக் கரைசேர்த்த கடல் அலையும் அவர். மனிதராய் அவதரித்து கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் திகதி பூவுலகை பிரிந்த பாபாவின் ஆசி தன்னை நம்பியவர்களின் அகங்களில் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. உடலை விட்டு அந்த உயிர் பிரிந்திருக்கலாம். ஆனால், அந்த உயிர் எங்கள் மனங்களில் ஐக்கியம் ஆகிவிட்டதென்பதே சத்தியம். அந்த முகத்தில் வழிந்த புன்னகையும், கை உயர்த்தி அவர் தரும் ஆசியும், கையசைத்து பாபா தரும் விபூதியும் தான் ஏக்கங்களாய் உருமாறி நிற்கிறது.


வார்த்தைகள் கை வந்து சேர அலைக்கழிக்கின்றன. இன்னும் பேசிக்கொண்டே போகவேண்டும் என்ற அவா இருந்தாலும் கடலைப் பற்றி மழைத்துளி என்ன சொல்ல முடியும்? தன்னை நம்பி வந்த யாரையும் பாபா அவர்கள் கைவிட்டதில்லை! முடிந்தால் நீங்களும் அந்த தர்மத்தின் பிறப்பிடத்தை நம்பிப் பாருங்கள்;அதிசயங்கள் பிறப்பிக்கப்படும். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அவதார தினமான இன்றைய திங்களில் அவரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசியதில் உச்சி குளிர்கிறேன். இப்போதைக்கு என் குருவை நாட எனக்குக் கிட்டியிருக்கும் இரண்டே வார்த்தைகள், “ *சாய் ராம்* ”. அதை உங்களிடமும் சொல்லி விடைப்பெறுகிறேன். நன்றி வணக்கம். *எல்லோரையும் நேசியுங்கள், எல்லோருக்கும் தொண்டாற்றுங்கள், உதவிகள் செய்யுங்கள், பிற உள்ளங்களைக் காயப்படுத்தாதீர்கள்* என்ற பாபாவின் வார்த்தைகளோடு முடிக்கப்படுகிறது இந்தப் பதிவு. மீண்டு சந்திப்போம். சாய் ராம்.


அன்புடன்,

டெல்வின்ராஜ்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post