கருப்பு: சமூக உளவியல்
வணக்கம். பல காலம் கழித்து அரியதொரு சந்திப்பு. இடை(விடு)ப்பட்ட வேளைகளில் பல படுகுழிகளையும் பள்ளங்களையும் சந்தித்து வரவேண்டிய கட்டாயத்தின் அடிப்படையில் என் எழுத்தாணி சற்று இளைப்பாறி விட்டது. எழுத்தின் மீது உதித்த காதல் மட்டும் இன்னும் அஸ்தமனம் ஆகாமல்,மன வானில். பள்ளங்களில் விழுந்தால் தான் பல்லக்கு கிடைக்கும் என்ற துணுக்கோடு என் அறிவு விளக்கை ஏற்றி வைத்த சில தீப்பந்தங்களை உங்களுக்கும் உரித்தாக்குகிறேன்.
மேனியின் நிறத்திற்கும் மேட்டுக்குடிக்கும் இடையே பல காலமாய் நடைப்பெறும் கள்ளகாதலை இங்கே அம்பலப்படுத்துவதே இன்றைய பதிவின் முதற்கண் நோக்கம். இதில் ஆய்வாளர்களின் மேற்கோள்களைக் காட்டிலும் அன்றாட வாழ்வியலில் குறிப்பாக தமிழர் சமுதாயத்தில் அரங்கேறும் அவலங்களும் காலங்காலமாய் தோள் நிறத்தைப் பற்றி நம்முள், நம் மரபணுவில் திணிக்கப்பட்ட பாகுபாடுகளுமே எடுத்துரைக்கப்படும்.
உங்கள் உயிருக்கு உடை உடல். அந்த உடலுக்கு அரிதாரம் நீங்கள் அணிந்திருக்கும் நிறம். அதை வகுத்தது புவியியலும் நாம் வாழும் பகுதிகளின் சீதோஷண நிலையும். அத்தகைய தமிழருக்குக் கிடைத்த பெரும் பேறு கருப்பு எனும் மகோன்னத வண்ணம். கருப்பு அதிகாரத்தின் அகரம், ஆளுமையின் ஆவணம், வீரத்தின் வீரியம். ஆரம்ப காலங்களில் அதை நமது இலக்கியங்கள் போற்றி புகழ்ந்து பேசினாலும் வெள்ளையரின் வருகைக்குப் பின்னாலோ அல்லது “சில” குறிப்பிட்ட வர்கத்தினரின் வசதிக்கு ஏற்றார் போல் நமது சிந்தனைக்குள் சாத்தான்கள் ஏவி விடப்பட்டன. அன்று தலைவிரித்தாட தொடங்கியது மேனி ரீதியான தீண்டாமை ரீங்காரம்;இசையாய் அல்ல இரைச்சலாய்.
“செகப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்”, “கருப்பன் கள்ளன்” என்று கருப்பினத்தவரைக் குற்றப்பரம்பரையாய் முத்திரை குத்தி அழகு பார்த்தது சமுதாயம். பிள்ளை கொஞ்சம் கருப்பாய் பிறந்து விடக் கூடாது அது பெரும் சாபக்கேடு என்று குழந்தை வெள்ளையாய் பிறக்க குங்குமப்பூ. அதுவும் பெண் பிள்ளை கருப்பாகவோ மாநிறமாக பிறந்தால் அப்பப்பா! தெய்வக்குற்றம் எனும் அளவிற்கு கருப்பைக் கருப்பையில் கூட அனுமதிக்காத வஞ்சகர்களாய் தமிழ்க்குடி உருவெடுத்து இருந்தது. எல்லாம் வெள்ளையனை “துரை” என்று அழைத்ததன் பாவம்! துரை துறைமுகம் ஏறி போய்விட்டார் அவர் அளித்த அடிமைத்தனம் மட்டும் அல்லாடிக் கொண்டிருக்கிறது.
அதிலும் நாகரீகம் என்ற பெயரில் சிலர் வர்ணிக்கும் வர்ணனைகள் எனக்குள் கர்ஜனையைத் தான் கிளப்பிச் செல்லும். கருப்பு என்பதற்கு பதிலாய் “அவ்ளோ ஒன்னும் கலர் இல்ல கொஞ்சம் நிறம் மட்டம் தான்”. எதை வைத்து முடிவெடுத்தீர்கள் கருப்பாய் பிறத்தல் மட்டம் என்று. புகழாரம் சூட்டுகிறேன் என்ற புன்னகையோடு வரும் இன்னொரு கேவலம்: “ கருப்பா இருந்தாலும் கலையா தான் இருக்க”. அது என்ன இருந்தாலும்? கருப்பு என்னவோ அழகின் பிறப்புக்குக் கருத்தடை போல பாவம் பார்த்து நீங்கள் சூட்டும் சாக்க்டை கிரீடம். அன்பர்களே இவை யாவும் இன்னும் நமது உற்ற தமிழர் சமுதாயத்திற்குள் நடத்தப்படும் கூத்துகளின் தொகுப்பு தான்.
வேற்றினத்தோர் நம்மைக் காட்சிப்படுத்துவதைக் எல்லாம் கேட்டால் அவை எமலோகம் வரை கரையான் போல மனதைக் கவ்விச் சிதைக்கும் வண்ணம் இருக்கும். எத்தனயோ தமிழர்கள் தங்களின் நிறத்தின் காரணத்தினால் தாழ்வாக,அசுத்தமானவர்களாக,படிப்பறிவற்ற வெறும் கூலிகளாகவே தகுதியுடையோர் என சந்தையில் பொருட்களுக்கு விலை பேசுவது போல் பேரம் பேசப்பட்டுள்ளனர். இன்றளவிலும் இத்தகைய அவலங்கள் அளவின்றி அல்லல் செய்வதை நாம் கண்களின் எதிரே இவ்வளவு ஏன் அவரவர் தொலைப்பேசியிலேயே தொல்லை செய்வதை நிதர்சனமாக காண முடிகிறது.
சமீபத்தில் என் உறவோடு உரையாடுகையில் அவள் எய்ததொரு சிந்தனை ஈட்டி என் இதயத்தைச் செவ்வென குத்தி கிழித்து அதன் அறியாமையை வதம் செய்து சென்றது. பொதுவாக, மலேசியாவில் மலாய் மொழியில் கருத்த மேனி உள்ளவர்களின் அழகை மெச்சிப் பாட “HITAM MANIS” என்றதொரு சொல்லாடல் பயன்பாட்டில் உண்டு. HITAM என்பது கருப்பு எனவும் MANIS என்பது இனிப்பு அதாவது அழகானது எனவும் இங்கே பொருள்படுகிறது. சற்றே கூர்ந்து கவனித்து பார்த்தால் நீங்கள் கருத்த மேனியோடு அழகாக உள்ளீர் என்ற பாராட்டு மட்டுமே இங்கே போதுமானது. அதற்கு தேவையற்றதொரு அடையைச் சேர்த்து நீங்கள் அழகிய கருப்பு நிறத்தோடு தோற்றம் தருகிறீர் என்று கருப்புக்குள் எதற்கிந்த வீண் பிரிவினை. கருப்பில் என்ன அழகிய கருப்பு அழகற்ற கருப்பு என்ற இரு பிரிவு? இதே புகழாரத்தை நம்மில் எத்தனை பேர் அழகான வெள்ளை நிறத்தோடு இருக்கிறீர்கள் என்று ஒரு வெள்ளை சருமத்தைக் கொண்டவரைக் கண்டு கூறுவோம்?கடந்து செல்லாது இதை மூளைக்குள் கடைந்து செல்லுங்கள்! ஒரு வகையில் என்ன மொத்தமாகவே இது “கருப்பா இருந்தாலும் கலையா தான் இருக்க” என்பதன் மலாய் வடிவம் தான்.
பளபளவென தோற்றமளிக்கும் சருமமே கண்கவர் கோலம் என்று தேவையற்ற விளம்பரங்களே இந்தப் பாகுபாட்டுக்குப் பாதை வகுக்குகிறது. என்னவோ கருப்பான சருமம் இருப்பது குற்றத்தைப் போலவும் அதை கொண்டோர் எல்லாம் அழகற்றவர் என்பது போலவும் சித்தரித்து வேடமிடும் கூத்தாடிகளுக்கிடையில் சிக்கித் தவித்தது போதும்! “செக்க செவேல்” என்று சொல்லும்போது வாயை ஆறு அங்குலத்திற்கு பிளப்பது போல “கண்ண கரே னு கருப்பா இருக்கே” என்று சொல்லும்போதும் பார்த்து இரசியுங்கள். கார்மேக வண்ணனாம் கண்ணனை நீலமாக்கியது போல், கற்பு காத்த இராமனைக் கருப்பு இல்லை என்று மறுத்தது போல் கருப்பு எல்லைகளை எடுத்தெறியும் மகாசக்தி!
கருப்பு உழைக்கும் வர்கத்தின் வஸ்திரம். அதை அமங்கலமாய் காட்சிப்படுத்திய பாவத்தைக் கங்கையும் கரைக்காது. இங்குக் கோரப்படுவது கருப்பை வெள்ளை சருமத்திற்கும் மேலாக உயர்த்திப் பேசும் ஆணவம் அல்ல கருப்பும் வெள்ளையும் வெறும் மண்ணுக்குள் மக்கும்,தீ திண்ணும் சதையின் மேற்பரப்பு சாயம் என்று உணர்ந்து உதித்தாலே போதும். சாமி கருப்புதான்,சாமி சிலையும் கருப்புதான்!
-டெல்வின் -
அ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி
DeleteKaruppa irunthalum azhaga irukke part hitss
ReplyDeleteமிக்க நன்றி
DeleteSuper nov 🔥
ReplyDeleteமிக்க நன்றி
DeletePost a Comment